எடப்பாடியை நம்பி களமிறங்கிய அதிமுக டாக்டருக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்க பாஜ ரெடி! சென்டிமென்ட் தொகுதியில் சீட் யாருக்கு?

ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் எந்த வேட்பாளர் வெற்றி பெறுகிறாரோ, அந்த கட்சி அல்லது கூட்டணி கட்சி தான் மாநிலத்தை ஆளும் என்ற சென்ட்டிமென்ட் அன்று முதல் இன்றும் பேசப்படுகிறது. ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் திமுக 5, காங்கிரஸ் 3, அதிமுக 6, மமக ஒரு முறை, சுயேச்சை ஒருமுறை வெற்றி பெற்றுள்ளனர். கடந்த 2021 தேர்தலில் திமுக வேட்பாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜ வேட்பாளர் குப்புராமுவை விட 50,479 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.

தேசிய சுற்றுலா தலம், புண்ணிய தலமான ராமேஸ்வரமும் இத்தொகுதியில் வருவதால், பாஜவிற்கு இந்த தொகுதியின் மீது எப்போதும் ஒரு கண் உண்டு. ஆனால், சமுக நல்லிணக்கத்திற்கு உதாரணமாக விளங்கக்கூடிய இந்த மாவட்டத்தில் மதவாத அரசியலுக்கு வேலை இல்லை. இதனால் வாக்காளர்கள் பாஜ, கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பை ஒரு போதும் வழங்குவது கிடையாது.

இருந்தபோதிலும் இந்தமுறை எப்படியாவது மீண்டும் ராமநாதபுரம் தொகுதியில் கூட்டணியில் சீட்டை கைப்பற்றிட வேண்டும் என ஏற்கனவே தோல்வி அடைந்த பாஜவை சேர்ந்த குப்புராமு, மாநில நிர்வாகி கருப்பு முருகானந்தம், மாவட்ட தலைவர் முரளீதரன், முன்னாள் மாவட்ட தலைவர் தரணி முருகேசன் ஆகியோர் முனைப்பு காட்டி வருகின்றனர். கடந்தாண்டு சீட் மறுக்கப்பட்ட அதிமுக மாஜி அமைச்சர் டாக்டர் மணிகண்டனுக்கு, இந்த முறை சீட் தருவதாக எடப்பாடி உறுதி கூறியுள்ளாராம்…

இதனால் புதுதெம்புடன் மணிகண்டனும் தொகுதியில் உள்ள விவசாயிகள், மீனவர்கள், தொழிலாளர்கள் என வாக்காளர்களை குறி வைத்து தீபாவளி, பொங்கல், ரம்ஜான், கிறிஸ்துமஸ் என பண்டிகை கால உடை,பொருட்களை வாரி வழங்கி எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார். ஆனால் பாஜவின் நிர்பந்தத்தால் அவர் கலங்கி நிற்கிறார். மாவட்டத்தில் 4 தொகுதிகளும் திமுகவின் கோட்டையாக இருப்பதால் இந்த முறையும் திமுக தான் வெற்றி பெறும் என்ற நிலையே உள்ளது.

நமக்கு என்ன வெற்றியா முக்கியம்? கூட்டணி தலைமை தருகின்ற பெட்டி தான் முக்கியம். பெயருக்கு செலவு செய்தாலும் கூட, பெரும் லாபம் நமக்கு தான் என்ற தேர்தல் கணக்கோடு பாஜவினர் அதிமுகவினருக்கு சீட் கொடுக்கவிடாமல் எப்படியாவது சீட் பெற்றுவிட வேண்டும் என முனைப்பு காட்டி வருகின்றனர் என அதிமுகவின் விஐபிகள் புலம்பி வருகின்றனர்.

Related Stories: