சென்னை: திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குழுவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று ஆலோசனை நடத்தினார். தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதி வரும் வாரத்தில் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் திமுக, தனது கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதே போல இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சிக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மநீம, தவாக, கொமதேக, எஸ்டிபிஐ, மஜக, முக்குலத்தோர் புலிப்படை, கொங்கு இளைஞர் பேரவை ஆகிய கட்சிகளுடன் முதல்கட்ட பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளது. வரும் நாட்களில் அவர்களுடன் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நடத்தி தொகுதிகள் இறுதி செய்யப்படும் என்று தெரிகிறது.
இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையிலான கே.என்.நேரு, திருச்சி சிவா, ஆ.ராசா, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ஆர்.எஸ்.பாரதி ஆகிய 7 பேர் அடங்கிய குழுவினருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் எவ்வாறு தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். அடுத்து எந்தெந்த கட்சிகளுடன் ஆலோசனை நடைபெற உள்ளது என்பது தொடர்பாக குழுவினரிடம் கேட்டறிந்தார். மேலும் குழுவினருக்கு பல்வேறு ஆலோசனைகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
