பெற்றோரின் எதிர்ப்பால் காதல் உறவுகள் போக்சோ வழக்காக மாறுவது அதிகரிப்பு: ஐகோர்ட் கிளை நீதிபதி கவலை

மதுரை: கன்னியாகுமரியை சேர்ந்த ஒருவர், அவரது நண்பரின் சகோதரியை, காதலித்து திருமணம் செய்தார். அப்போது அந்த சிறுமிக்கு 16 வயது என்பதால், நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசார் அந்த நபர் மீது போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். திருமணத்திற்கு பின், பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக 1098 என்ற குழந்தைகள் உதவி எண்ணுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் இருவரையும் மீட்டு நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இதுதொடர்பான வழக்கை விசாரித்த நாகர்கோவில் போக்சோ சிறப்பு நீதிமன்றம், சிறுமியை திருமணம் செய்தவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதை எதிர்த்து அவர், ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி மாலா பிறப்பித்த உத்தரவு : சம்பந்தப்பட்ட சிறுமியின் வயது நிரூபிக்கப்படாததால் மனுதாரர் மீதான போக்சோ சட்டத்தின் கீழான குற்றச்சாட்டை ஏற்க முடியாது.

எனவே, அவருக்கு வழங்கிய 20 ஆண்டு சிறை தண்டனை ரத்து செய்யப்படுகிறது. ஒப்புதலுடன் கூடிய காதல் உறவுகள், பெற்றோரின் எதிர்ப்பால் பின்னர் போக்சோ வழக்குகளாக மாறும் சம்பவங்கள் தற்போது அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற வழக்குகளில் நீண்ட காலம் சிறையில் இருக்க நேரிடுவது கவலை அளிக்கிறது.

போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த டிவி, பத்திரிகைகள் மூலம் பரவலாக விளம்பரம் செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு முகாம்கள் நடத்த தலைமை செயலர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து, தலைமை செயலர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 3க்கு தள்ளி வைத்தார்.

Related Stories: