சென்னை: சட்ட சபை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட வரலாறு காணாத வகையில் 15,372 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். அவர்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல் நடத்த உள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. ஆளுங்கட்சியான திமுக சார்பில் போட்டியிட விரும்புகிறவர்களிடம் இருந்து விருப்ப மனுக்கள் கடந்த மாதம் 20ம் தேதி முதல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் பெறப்பட்டு வந்தது.
தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளுக்கும் விருப்ப மனுக்கள் பெறப்பட்டது. விருப்ப மனு அளிக்க திமுகவினரிடம் காணப்பட்ட உற்சாகத்தால் விருப்ப மனுவுக்காக கால அவகாசம் மார்ச் 6 வரை வரை நீட்டிக்கப்பட்டது. தற்போதைய அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடவும், நிர்வாகிகள் பலரும் விருப்ப மனு வழங்கினர்.
மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தங்கள் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்றும் நிறைய பேர் விருப்ப மனு அளித்தனர். 14 நாட்களாக நடந்த விருப்ப மனு விநியோகம் நேற்று முன்தினம் முடிந்தது. கடைசி நாளன்று அண்ணா அறிவாலயம் தொண்டர்கள் வெள்ளத்தில் திக்குமுக்காடியது. நேற்று முன்தினமும் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் விருப்ப மனு அளித்தனர்.
வரலாறு காணாத வகையில் மொத்தம் 15,372 விருப்ப மனுக்களை வழங்கியுள்ளனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தங்கள் தொகுதியில் போட்டியிட வேண்டும் என 1,473 விருப்ப மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் திமுகவின் திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைவது உறுதியாகிவிட்ட உற்சாகத்தில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட திமுகவினர் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர் என்று திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருப்ப மனு முடிவடைந்துள்ள நிலையில் வேட்பாளர் நேர்காணல் எப்போது நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு நிர்வாகிகள் மத்தியில் எழுந்துள்ளது. தற்போது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை இறுதி செய்வதில் திமுக முனைப்பு காட்டி வருகிறது.
கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக முடிவடைந்தவுடன் திமுக போட்டியிடும் தொகுதிகள் அடையாளம் காணப்படும். இதை தொடர்ந்து அந்த தொகுதிகளுக்கு விருப்ப மனு அளித்தவர்களை மாவட்ட வாரியாக அழைத்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேர்காணல் நடத்தி வேட்பாளரை முடிவு செய்வார்.
