அரசு அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டம்: வேலூரில் 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி

வேலூர், பிப்.10: வேலூரில் 3 அம்ச கோரிக்கை வலியுறுத்தி அரசு அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு அலுவலகங்களில் குடியேறும் மாநிலம் தழுவிய போராட்டம் நேற்று நடந்தது. அதன்படி, வேலூர் அண்ணா சாலையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் கோபால் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். போராட்டத்தின் போது, தெலங்கானா, புதுச்சேரி மாநிலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்குவதுபோல் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கு மாத உதவித்தொகை 3 ஆயிரம், கடும் ஊனமுற்றவர்களுக்கு ₹5 ஆயிரம் வழங்க வேண்டும். புதிய சட்டம் 2016ன்படி அரசு அனைத்து துறை வேலைவாய்ப்பிலும் 4 சதவீத இடஒதுக்கீட்டின் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். சட்டப்படி தனியார் துறையில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைந்தபட்சம் 5 சதவீதம் ஒதுக்கி சட்டம் இயற்ற வேண்டும் என 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தினர். இதில் 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: