அரூர் பகுதியில் கரும்பு வெட்டுக்கூலி உயர்வு

அரூர், பிப்.10: அரூர் அடுத்த கோபாலபுரத்தில் உள்ள சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு அரூர், மொரப்பூர், பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், கரும்புகளை அரவைக்கு அனுப்பி வருகின்றனர். இந்நிலையில், கரும்பு வெட்டும் கூலி கடுமையாக உயர்ந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: நடப்பாண்டு சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு 3,284 ஏக்கர் கரும்பை, விவசாயிகள் பதிவு செய்திருந்தனர். வறட்சியால் பழைய கரும்புகள் காய்ந்து விட்ட நிலையில், கடந்த டிசம்பர் 25ம் தேதி ஆலையில் கரும்பு அரவை தொடங்கப்பட்டது. இந்நிலையில், தொழிலாளர்களின் பற்றாக்குறையால், கரும்பு வெட்ட முடியாமல், விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். ஆலாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட ஏக்கரில், கரும்பு பயிர்கள் பூத்துக்குலுங்குகின்றன. இதனால் கரும்பு பிழி திறன் குறையும். இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும் என்பதால் கவலை அடைந்துள்ளனர். மேலும் தொழிலாளர்கள் பற்றாக்குறையால், ஒரு டன்னுக்கு ₹550 இருந்த வெட்டுக்கூலி, ₹700ஆக உயர்ந்துள்ளது. ஆனால் கரும்புக்கான கொள்முதல் விலை பல ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் உள்ளது. இவ்வாறு கூறினர்.

Related Stories: