தா.பழூர் மார்ச்.4: அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள சோழமாதேவி கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சப்த கன்னியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஊர் முக்கியஸ்தர்கள், கிராம பொதுமக்கள் ஒன்றிணைந்து தீமிதி திருவிழா நடத்த முடிவு செய்தனர். அதன்படி, கடந்த சில தினங்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கி காப்பு கட்டுதல் மற்றும் அம்மன் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்று வந்தது.
இந்நிலையில், முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கோயில் வளாகத்தில் முன்பு பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட தீக்குண்டத்தில் பக்தர்கள் விரதமிருந்து அக்னிகுண்டம் ஏந்தி தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை காப்பு கட்டிக்கொண்டு தீ மிதித்தனர். விழாவின் முடிவில் பக்தர்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.
