கோத்தகிரி அருகே குட்டிகளுடன் காட்டு யானைகள் முகாம்

கோத்தகிரி, மார்ச் 4: கோத்தகிரி அருகே உள்ள கோழிக்கரை மற்றும் குஞ்சப்பனை பழங்குடியினர் கிராமத்தில் குட்டிகளுடன் முகாமிட்ட காட்டு யானைகளால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். கோத்தகிரி அருகேயுள்ள கோழிக்கரை, குஞ்சப்பனை அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலாப்பழம் சீசன் துவங்கி உள்ளது. அவற்றை ருசிப்பதற்காக காட்டு யானைகள் அதிகமாக வந்த வண்ணம் உள்ளன.

கோத்தகிரி அருகே உள்ள முள்ளூர் மலைப்பாதையில் தேயிலை தோட்டங்களில் முகாமிடும் காட்டு யானைகள், அவ்வப்போது சாலைகளில் உலா வருவதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்து உள்ளனர். மேலும் இந்த காட்டு யானைகள் கோத்தகிரி அருகே உள்ள கோழிக்கரை முள்ளூர் மற்றும் குஞ்சப்பனை பழங்குடியினர் கிராமத்தில் குட்டிகளுடன் முகாமிடுகின்றன. இதனால், கிராம மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.

கிராமத்தில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள் இரவு மற்றும் பகல் நேரங்களில் சாலைகளில் உலா வருவதால் பழங்குடியின கிராம மக்கள் வெளியே வர அச்சமடைந்துள்ளனர். எனவே வனத்துறையினர் யானைக் கூட்டத்தை கண்காணித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பழங்குடியின கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

 

Related Stories: