சனத்குமார் நதி கால்வாய் புனரமைப்பு பணி மும்முரம்

தர்மபுரி, மார்ச் 2: தர்மபுரியில் சனத்குமார் நதியின் கால்வாய் புனரமைப்பு பணியை, கலெக்டர் சதீஸ் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தர்மபுரி மாவட்டத்தில், தென்பெண்ணையின் துணை நதிகளில் முக்கியமான நதி சனத்குமார் நதி. இந்த நதியின் கால்வாய்க்கு வத்தல்மலை அடிவாரம் வனப்பகுதி நீர்பிடிப்பு பகுதியாக உள்ளது. தற்போது, இந்த நதியின் கால்வாய் கழிவுநீர் ஓடும் பகுதியாக மாறியுள்ளது. பல இடங்களில் நதியின் கால்வாய் பகுதி ஆக்கிரமிப்பு பிடியில் சிக்கி தவிக்கிறது. கால்வாய் இருக்கும் இடமே தெரியாத அளவிற்கு குறுகியும், புதர் மண்டியும் உள்ளது. ஏமகுட்டியூர், ராமன்நகர், பாரதிபுரம், அன்னசாகரம், குப்பாண்டிதெரு, காமாட்சியம்மன் தெரு, மதிகோன்பாளையம், கிருஷ்ணாபுரம், கம்பைநல்லூர் வழியாக இருமத்தூர் தென்பெண்ணை ஆற்றில் இந்த நதியின் கால்வாயில் கழிவுநீர் தேக்கம் அடைந்து கலக்கிறது.

குறிப்பாக, தர்மபுரி நகரப்பகுதியில் சுமார் 8 கிலோ மீட்டர் தூரம் சாக்கடை கால்வாய் தேங்கி நிற்கிறது. சனத்குமார் நதியின் கால்வாய் பகுதியை அகலப்படுத்தி தூர்வார வேண்டும். இதற்காக சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில், கடந்த 18ம் தேதி, தர்மபுரி மாவட்ட நிர்வாகம், எக்ஸ்னோரா மற்றும் ஆதிபவுண்டேசன் இணைந்து சனத்குமார் நதி புனரமைப்பு பணி தொடங்கியது. மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் ரூபன் சங்கர்ராஜ், தர்மபுரி வருவாய் கோட்டாட்சியர் காயத்திரி ஆகியோர் புனரமைப்பு பணியை தொடங்கி வைத்தனர்.

இந்நிலையில், கலெக்டர் சதீஸ் சனத்குமார் நதி கால்வாய் தூர்வாரும் பணிகள் மற்றும் கழிவுகள் அகற்றப்படுவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, வருவாய் கோட்டாசியர் காயத்ரி, தாசில்தார் சுகுமார், தன்னார்வலர் ஆதிமூலம், பொதுபணித்துறை அலுவலர் மாலதி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Stories: