இலுப்பூர் பிப்.28: அன்னவாசல் அருகே உள்ள புல்வயல் அரசு உயர்நிலைப் பள்ளியில் பழங்கால பொருட்கள் குறித்த கண்காட்சி நடைபெற்றது. அன்னவாசல் அருகே உள்ள புல்வயல் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு பயிலக்கூடிய மாணவ மாணவியர்கள் பழங்காலத்தில் பயன்பாட்டில் இருந்த பொருட்களை தயார் செய்து கண்காட்சியில் இடம்பெறச் செய்திருந்தனர்.
இக் கண்காட்சியில் புல்லாங்குழல், இலைத் தோரணங்கள், களிமண்ணால் ஆன கைவினைப் பொருட்கள், பனையோலை விசிறிகள் மற்றும் பனையோலை காற்றாடிகள், ஓலைச்சுவடிகள் மற்றும் பனையோலை பெட்டிகள் மற்றும் கற்கால கருவிகள், தீப்பந்தங்கள், களிமண் சமையல் பாத்திரங்கள், மற்றும் மாவு அரைக்கும் உரல், அம்மி போன்ற பொருட்கள் இடம் பெற்றிருந்தன. தலைமையாசிரியர் செந்தில் முருகன் தலைமையில் நடைபெற்ற இக்கண்காட்சியை சமூக அறிவியல் ஆசிரியை சுரேகா வழி நடத்தினார். ஆறாம் வகுப்பு மாணவர்களால் நடத்தப்பட்ட இக்கண்காட்சியை அத்தனை வகுப்பு மாணவர்களும் ஆசிரியர்களும் கண்டு மகிழ்ந்தனர்.
