ஜேஇஇ பி.ஆர்க், பி.பிளானிங் தேர்வு முடிவுகள் வெளியீடு: தமிழக மாணவன் தேசியளவில் 2வது இடம்

சென்னை: ஜேஇஇ பி.ஆர்க், பி.பிளானிங் ஆகிய படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதில், தமிழக மாணவன் தேசியளவில் 2வது இடம்பிடித்துள்ளார். ஐஐடி, என்ஐடி போன்ற ஒன்றிய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவு தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெறவேண்டும். இவை ஜேஇஇ முதன்மை தேர்வு, பிரதான தேர்வு என இரு பிரிவுகளாக நடைபெறும். இதில் முதன்மை தேர்வானது தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் ஆண்டுதோறும் 2 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி 2026-27ம் கல்வியாண்டுக்கான ஜேஇஇ முதல்கட்ட முதன்மை தேர்வு, கடந்த ஜனவரி 21 முதல் 29ம் தேதி வரை நடத்தப்பட்டது. இதில் பி.ஆர்க், பி.பிளானிங் ஆகிய படிப்புகளுக்கான 2ம் தாள் தேர்வு ஜனவரி 29ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை நாடு முழுவதும் 426 மையங்களில் 66,519 பேர் எழுதினர். அதற்கான தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் இரவு வெளியானது. இதில், கேரளாவை சேர்ந்த மாணவர்கள் சூர்யாதேஜஸ் (பிஆர்க்), கவுரி சங்கர் (பி.பிளானிங்) ஆகியோர் தேசியளவில் முழு மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

இதேபோல், தமிழக மாணவன் சுஷில் நாராயணன் (பி.ஆர்க்) 99.99 சதவீத மதிப்பெண் பெற்று தேசியளவில் 2ம் இடமும், மாணவர் யஷ்வந்த் மகேந்திரன் பிரியா (பி.பிளானிங்) 99.98 சதவீத மதிப்பெண்ணுடன் தேசியளவில் 5வது இடமும் பெற்றுள்ளனர். மாணவர்கள் https://jeemain.nta.nic.in/ என்ற இணையதளத்தில் சென்று தங்கள் முடிவுகளை அறியலாம். இதுகுறித்த கூடுதல் விவரங்களை www.nta.ac.in என்ற இணையதளத்தில் அறியலாம் என்று என்டிஏ தெரிவித்துள்ளது. அடுத்தகட்டமாக ஜேஇஇ 2ம் கட்ட முதன்மை தேர்வு ஏப்ரல் 1 முதல் 9ம் தேதி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: