அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கடந்த 2006ம் ஆண்டு பேரூர் தொகுதியிலும், 2011, 2016, 2021 ஆகிய ஆண்டுகளில் தொண்டாமுத்தூர் தொகுதியிலும் இருந்து சட்டப்பேரவைக்கு தேர்வாகியுள்ளார். தொடர் வெற்றிகளை சந்தித்து வரும் எஸ்.பி.வேலுமணிக்கு, 2026 தேர்தல் களம் சவாலானதாக மாறியுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் என அடுத்தடுத்து கோவையில் அதிமுக படுதோல்வி அடைந்த நிலையில், மீண்டும் தனது பவரை காட்ட வேண்டிய கட்டாயத்தில் எஸ்.பி.வேலுமணி தொண்டாமுத்தூர் தொகுதியில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.
கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள 21 தொகுதிகளின் பொறுப்பாளராக உள்ள அவர், மற்ற தொகுதிகளை பற்றி கவலைப்படாமல் தோல்வி பயம் காரணமாக தொண்டாமுத்தூர் தொகுதிக்குள்ளேயே முடங்கி உள்ளார். தனது தொகுதி வாக்காளர்களை ஸ்பெஷலாக கவனித்து வரும் எஸ்.பி.வேலுமணி, பரிசுப்பொருட்களை வாரி வழங்கி வருகிறார்.
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகிய தலைவர்களின் பிறந்த நாள் விழா பரிசு என, அதிமுக சார்பில் மற்ற தொகுதிகளில் சில்வர் தட்டு மற்றும் ஹாட் பாக்ஸ் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் தொண்டாமுத்தூர் தொகுதியில் மட்டும் ஒவ்வொரு வாக்காளர்களின் வீடுகளுக்கும் எஸ்.பி.வேலுமணி சார்பில் குடை, வாட்டர் பாட்டில், ஹாட் பாக்ஸ், சேலை, சட்டை துணி, வேஷ்டி, சில்வர் தட்டு உள்ளிட்டவற்றை அள்ளி வழங்கி வருகிறார்.
அதுமட்டுமின்றி தினந்தினம் வாக்காளர்களுக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் பிரியாணி விருந்து வைத்து வருகிறார். அடுத்த கட்டமாக ஒவ்வொரு மாடி வீடுகளுக்கும் தண்ணீரை சேமித்து வைக்க உதவும் மேல்நிலை தொட்டி, ஓட்டு வீடுகளுக்கு ட்ரம் ஆகியவை எஸ்.பி.வேலுமணி சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. அந்த ட்ரம் மற்றும் தண்ணீர் டேங்கில் முப்பெரும் தலைவர்கள் பிறந்த நாள் விழா மற்றும் வழங்குபவர் எஸ்.பி.வேலுமணி ஆகிய வாசகங்கள் அச்சடிக்கப்பட்டு வழங்கப்படுகின்றன.
இதேபோல தொண்டாமுத்தூர் தொகுதியில் உள்ள முக்கிய கோயில்களுக்கு தேவையான வசதிகளும் எஸ்.பி.வேலுமணி சார்பில் செய்து தரப்பட்டு வருகின்றன. தேர்தல் சமயத்தில் வாக்காளர்களுக்கு கவர்ச்சிகரமான பரிசுப்பொருட்களையும், பணத்தையும் வாரி வழங்க எஸ்.பி. வேலுமணி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த தேர்தலைகளை போல் இல்லாமல் எஸ்.பி.வேலுமணியை தோல்வி பயம் ஆட்டி வைப்பதால்தான், பரிசுப்பொருட்களை வாக்காளர்களுக்கு வாரி இறைப்பதாக ரத்தத்தின் ரத்தங்களே முணுமுணுக்கின்றனர்.
