சென்னை: தமிழ்நாட்டின் உயரிய விருதான தகைசால் தமிழர் விருது பெற்ற முதுபெரும் தலைவர் தோழர் நல்லகண்ணு மறைவையொட்டி, முழு அரசு மரியாதையுடன் செவ்வணக்கம் செலுத்தப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: “எனக்கு ஒரு கண்ணில் சரிவர பார்வை இல்லை என்றாலும், அகத்தில் மற்றொரு கண் இருக்கிறது.
அதுதான் நல்லகண்ணு” என்று கலைஞரால் கண்ணாக போற்றப்பட்ட முதுபெரும் தலைவர், தோழர் நல்லகண்ணு மறைவுற்றார் என்ற செய்தி கடும் துயரத்திற்கு ஆளாக்கியுள்ளது. நம் சமகாலத்தில் வாழ்ந்த சமரசமற்ற போராளி; நாட்டின் விடுதலைக்காக, பாட்டாளி வர்க்கத்தின் நலனுக்காக தம் வாழ்வின் பெரும்பகுதியை ஈகம் செய்த தியாக பெருஞ்சீலர்.
சிறை, சித்திரவதை, வலிகள் நிறைந்த வாழ்க்கை என்று எத்தனை இடர்கள் வந்தாலும் – சுட்டுப் பொசுக்கினாலும் – தோழர்களை தூக்கினில் ஏற்றினாலும் விட்டுப்பிரியாது – செங்கொடி வீரம் குறையாது என்று தோழர் ஜீவா முழங்கியதை போல கொள்கை உறுதி குலையாமல் குன்றமென நிமிர்ந்து நின்ற பண்புக்குரியவர் தீரமிகு தோழர் நல்லகண்ணு. பொடா, எஸ்மா, டெஸ்மா போன்ற அடக்குமுறை சட்டங்களுக்கு எதிரான போராட்ட களங்களில், தலைவர் கலைஞருடன் தோளோடு தோள் நின்று களமாடியவர்.
பொதுவுடைமை கருத்தியலும், திராவிட இயக்க கருத்தியலும் சமூக மாற்றத்துக்கான இரட்டைக்குழல் துப்பாக்கியாக செயல்பட வேண்டிய கோட்பாட்டு தோழமைகள் என்பதில் எப்போதுமே உறுதியாக இருந்தவர். கலைஞர் தமது ஆட்சி காலத்தில் நல்லகண்ணுக்கு அம்பேத்கர் விருதை வழங்கி சிறப்பித்தார். நமது திராவிட மாடல் அரசின் சார்பில் அவருக்கு தகைசால் தமிழர் விருதை வழங்கும் வாய்ப்பை பெற்றது எனது பெரும் பேறு. எப்போதும் என்மேல் அன்பும் பாசமும் கொண்டவராக இருந்தார்.
திராவிட மாடல் ஆட்சி அமைந்த பிறகு உருவாக்கிய திட்டங்களை மனப்பூர்வமாக வரவேற்றார். அவரது ஒவ்வொரு பிறந்தநாளிலும் அவரை சந்தித்து வாழ்த்து பெறுவதை நான் வழக்கமாக வைத்திருந்தேன். தோழர் நல்லகண்ணு வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்ந்தோம் என்பது நமக்கு பெருமை. அவர் பெற்ற விருதுகள், பரிசுகள் எவையானாலும், அவற்றோடு தொகை அனைத்தையும் கட்சிக்காகவும், மக்கள் நலனுக்காக அரசிடம் ஒப்படைத்த அப்பழுக்கற்ற தலைவர் அவர்.
தான் வேறு, இயக்கம் வேறு என்று பிரித்து பார்க்காமல், இயக்கத்திற்காக இயக்கமாகவே வாழ்ந்தவர், என்று அவரது நூற்றாண்டு விழாவில் நான் குறிப்பிட்டது இன்றும் நினைவலைகளாக வந்து என் நெஞ்சில் மோதுகிறது. தோழரின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் இயக்க தோழர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலும், ஆறுதலும்.
மறக்க முடியாத அந்த மாமனிதரின் வாழ்வே நமக்காக அவர் விட்டு சென்றிருக்கும் மகத்தான செய்தி. அதுவே நமக்கு வழிகாட்டும் ஒளியாகட்டும். பாட்டாளி மக்களுக்காகவே வாழ்ந்து நிறைந்த பகட்டில்லா தோழர் நல்லகண்ணு நினைவும், புகழும் என்றென்றும் காலத்தால் அழியாத கல்வெட்டாக மக்கள் மனதில் நிலைத்திருக்கும். தமிழ்நாட்டின் உயரிய விருது பெற்ற நம் தகைசால் தமிழரை முழு அரசு மரியாதையுடன் செவ்வணக்கம் செலுத்தி வழியனுப்பி வைப்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
