சிங்கப்பூர் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏசி பழுது வெப்பம் பரவியதால் விமானத்தை இயக்காமல் இறங்கி சென்ற விமானி: பயணிகள் 4 மணி நேரம் உள்ளிருப்பு போராட்டம்

* சிஐஎஸ்எப் வீரர்களை வைத்து மிரட்டியதால் பரபரப்பு: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

சென்னை: சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏசி பழுது காரணமாக வெப்பம் பரவியதால் விமானத்தை இயக்காமல் விமானி இறங்கிச் சென்றார். இதனால், பயணிகள் விமானத்தின் உள்ளே 4 மணிநேரம் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய தொழில் பாதுகாப்பு படையினரை வரவழைத்து பயணிகளுக்கு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம், சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்று காலை 7.20 மணியளவில், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாரானது. விமானத்தில் 198 பயணிகள் இருந்தனர். இந்த விமானம் ஓடுபாதையில் புறப்பட தயாரான போது, விமானத்திற்குள் ஏசி பழுதாகி, வெப்பநிலை உயர்ந்ததால், பயணிகள் கூச்சலிட்டனர்.

உடனடியாக விமானி, விமானத்தை மேற்கொண்டு இயக்காமல், ‘ஏர்கிராப்ட் டெம்ப்ரேச்சர் ப்ராப்ளம்,’ என்று கூறி, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு அவசரமாக தகவல் தெரிவித்தார். இதையடுத்து விமானத்தின் கதவுகள் திறக்கப்பட்டன. ஏசி பழுதை சரி செய்த பின்பு வேறு விமானி வந்து விமானத்தை இயக்குவார் என்று கூறிய விமானி, தனது பணி முடிந்து விட்டதாக தெரிவித்துவிட்டு விமானத்தில் இருந்து இறங்கி சென்று விட்டார்.

சிறிது நேரத்தில் விமானத்தின் ஏசி பிரச்னை சரி செய்யப்பட்டது. ஆனால், நீண்ட நேரமாகியும் விமானத்தை இயக்குவதற்கு விமானி வராததால், பயணிகள் விமானத்தின் உள்ளே பரிதவித்தனர். மேலும், விமானத்தின் உள்ளே கோஷமிட்டு சுமார் 4 மணிநேரம் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒட்டுமொத்தமாக விமானத்தில் இருந்து கீழே குதித்து விடுவோம் என்று கூறி போராட்டத்தை தொடர்ந்தனர். உடனடியாக சென்னை விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் வரவழைக்கப்பட்டு, பயணிகளை மிரட்டி, விமானத்திலிருந்து கீழே இறங்க விடாமல் தடுத்து, மீண்டும் உள்ளே அனுப்பினர்.

இதனால் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இத்தகைய சூழலில் சென்னை விமான நிலைய அதிகாரிகள் யாரும் இதைக் கண்டு கொள்ளவில்லை, என்று கூறப்படுகிறது. தொடர்ந்து, காலை 11 மணியளவில் விமானி வரவழைக்கப்பட்டு சுமார் 4 மணிநேரம் தாமதமாக சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் புறப்பட்டு சென்றது.

இதனிடையே, இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏசி பழுதால் ஏற்பட்ட பிரச்னை, பயணிகள் உள்ளிருப்பு போராட்டம் ஆகியவற்றை வீடியோ எடுத்த பயணிகள் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். அந்த வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. விமான பாதுகாப்பு சட்ட விதிமுறைகளின்படி, வானில் பறக்காமல் தரையில் நின்று கொண்டிருக்கும் விமானத்திற்குள் பயணிகளை 2 மணி நேரத்திற்கு மேல், அமர வைப்பது விமான பாதுகாப்பு சட்டத்திற்கு முரணானது.

இந்நிலையில், தரையில் நின்றுகொண்டிருந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் 4 மணி நேரத்திற்கு மேலாக பயணிகளை அமரவைத்தது தொடர்பாக இந்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சகம் விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று இணையதளத்தில் பலர் பதிவிட்டுள்ளனர். அதன்பேரில், டெல்லியில் உள்ள இந்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சகம் இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: