எடப்பாடி பழனிசாமி தொகுதி பங்கீட்டிற்கு எந்த நடவடிக்கை எடுக்காததால் அதிருப்தி பாஜ மேலிட உத்தரவுப்படி ஒன்றிய அமைச்சர் பியூஸ்கோயல் சென்னை பயணம் ரத்து: அதிமுக – பாஜவினர் இடையே அதிருப்தி

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொகுதி பங்கீட்டிற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அதிருப்தி அடைந்த பாஜ மேலிடம் உத்தரவின் பெயரில் ஒன்றிய அமைச்சர் பியூஸ்கோயல் இன்றைய சென்னை பயணத்தை ரத்து செய்துள்ளார். அதிமுக கூட்டணியில் பாஜ, பாமக, அமமுக மற்றும் சிறிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த கட்சிகள் அனைத்தும் பாஜ மேலிட மிரட்டலை தொடர்ந்து அக்கட்சியுடன் கூட்டணி அமைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் கூட்டணிக்கு அதிமுக தலைமை, எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளர் என்று ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் கூட்டணியை உருவாக்குவதில் பாஜ மூத்த தலைவர் அமித்ஷா, ஒன்றிய அமைச்சர் பியூஸ்கோயல் ஆகியோர் மட்டுமே செய்து வந்தனர். இந்நிலையில் கூட்டணியில் சில கட்சிகளை சேர்க்க எடப்பாடி பழனிச்சாமி எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. மேலும் அதிமுக பல பிரிவுகளாக உடைந்துள்ளதால் அனைவரையும் ஒன்று சேர்க்க வேண்டும் என்று பாஜ விரும்பியது. ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி சம்மதிக்கவில்லை.

கடைசியில் அமமுக மட்டும் பாஜ கூட்டணியில் சேர்க்க எடப்பாடி சம்மதித்தார். சசிகலா, ஓபிஎஸ் ஆகியோரை கூட்டணியில் சேர்க்க எடப்பாடி சம்மதித்தார். ஆனால் அவர்கள் இருவரையும் கட்சியில் சேர்க்க மறுத்துவிட்டார்.  சசிகலா, ஓபிஎஸ் அதிமுக கட்சியில் சேர தயாராக உள்ளோம் என்று அமித்ஷாவிடம் தெரிவித்தனர். மேலும் வெளிப்படையாகவும் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் எடப்பாடி பழனிசாமி அதை ஏற்கவில்லை.

அதனால் சசிகலா தனியாக கட்சி தொடங்குவதாக அறிவித்து விட்டார். எடப்பாடி பழனிசாமி மீது கடும் குற்றச்சாட்டுகளை தெரிவித்திருந்தார். குறிப்பாக உயிருக்கு ஆபத்து விளைவிக்கிறார் என்று தெரிவித்திருந்தார். ஓபிஎஸ் எடப்பாடி மீது கடும் குற்றச்சாட்டுகளை கூறிவருகிறார். இதனால் அவர்கள் இருவரும் அதிமுகவிற்கு எதிராக பயணிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது பாஜ மேலிடத்திற்கு எடப்பாடி மீதான அதிருப்தியை ேமலும் கூட்டியது.

அதேநேரத்தில் தேமுதிகவை கூட்டணியில் சேர்க்க பாஜ விரும்பியது. ஆனால் எடப்பாடி எந்த முயற்சியும் எடுக்காததால் தேமுதிக, திமுக கூட்டணியில் சேர்ந்துவிட்டது. இவ்வாறு பல கூட்டணி குழப்பங்கள் அதிமுகவில் ஏற்பட்டது. இவை அனைத்திற்கும் எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கையே காரணம் என்று அமித்ஷா கருதினார். இதனால் அமித்ஷாவும் எடப்பாடி மீது அதிருப்தியடைந்தார். ேமலும் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேசுவதற்கு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை, பேச்சுவார்த்தை குழுவையும் அமைக்கவில்லை.

டெல்லியுடன் பேசியாவது தொகுதி பங்கீட்டை முடிக்கலாம். அதற்கான எந்த நடவடிக்கையும் எடப்பாடி எடுக்கவில்லை என்று பாஜ மேலிடம் அதிருப்தி அடைந்தது. இந்நிலையில் சென்னை, அமைந்தகரையில் பாஜ மாநில தேர்தல் பணிமனை இன்று திறக்கப்படவுள்ளது. இந்த பணிமனையை ஒன்றிய அமைச்சர், தமிழக தேர்தல் பொறுப்பாளருமான பியூஸ்கோயல் திறந்து வைப்பதாக இருந்தது.

ஆனால் எடப்பாடி பழனிசாமியின் கூட்டணி குழப்பங்களால் அதிருப்தியடைந்த அமித்ஷா, பியூஸ்கோயலை சென்னை செல்ல வேண்டாம் என்று உத்தரவிட்டுள்ளார். இதனால் தனது சென்னை பயணத்தை பியூஸ்கோயல் ரத்து செய்து விட்டார். இது அதிமுக- பாஜ கூட்டணியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று இந்த பணிமனையை தமிழக பாஜ மேலிட பொறுப்பாளர் சுகாதர் ரெட்டி திறந்து வைக்கிறார்.

இதில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் பொன்ராதாகிருஷ்ணன், ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோர் மட்டுமே கலந்து கொள்கின்றனர். கூட்டணி குழப்பங்களால் ஒன்றிய அமைச்சர் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது அதிமுக- பாஜ கூட்டணி இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* அண்ணாமலையும் புறக்கணிப்பு
மாநில தலைவர் பதவியில் இருந்து மாற்றப்பட்டதையடுத்து அண்ணாமலை தொடர்ந்து கட்சி நிகழ்ச்சிகளை புறக்கணித்து வருகிறார். இன்று நடைபெறும் தேர்தல் பணிமனை திறப்பு விழாவிற்கு மாநில தலைமை அழைத்தது, ஆனால் அவர் வர மறுத்துவிட்டார். இதனால் அவர் மீது டெல்லியில் புகார் செய்ய நயினார் நாகேந்திரன் திட்டமிட்டுள்ளார். அண்ணாமலை- நயினார் நாகேந்திரன் மோதல் நாளுக்கு நாள் வலுத்து வருவது பாஜவினர் இடையே சோர்வை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: