முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா நேற்று முன்தினம் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி நடந்த பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசினார். இந்த கூட்டத்தில் புதிதாக துவக்கப் போகும் தனது கட்சியின் கொடியை அறிமுகம் செய்து வைத்ததுடன் விரைவில் கட்சியின் பெயரை அறிவிப்பதாகவும் கூறினார். ஜெயலலிதா மறைவுக்கு பின் நடந்த சம்பவங்கள் குறித்தும், ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி குறித்தும் பேசியிருந்தார். குறிப்பாக தன்னை சிறையிலேயே கொல்லவும், தன் கணவரின் இறப்பிற்கு கூட பரோல் தராமல் எடப்பாடி அரசு கடும் நெருக்கடி கொடுத்ததாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
கமுதி பொதுக் கூட்டத்தை முடித்துக் கொண்டு தனது ஆதரவாளர்களுடன் மதுரை வந்த சசிகலா, அழகர்கோவில் ரோட்டியிலுள்ள தனியார் ஹோட்டலில் தங்கி ஓய்வெடுத்தார். நேற்று பிற்பகலுக்கு மேல் தென்மாவட்டங்களைச் சேர்ந்த ஓய்வு ெபற்ற என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் ஏடிஎஸ்பி வெள்ளத்துரை, தேனி கர்ணன், மதுரை சுரேஷ் உள்ளிட்ட நிர்வாகிகளை மட்டும் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதில், ‘கட்சியின் பெயர் விரைவில் அறிவிக்கப்படும். தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நிர்வாகிகள் நியமனம் செய்ய வேண்டும்.
அதற்குள் நிர்வாகிகள் பட்டியலை தயாரிக்கவேண்டும்’ என்று கூறியுள்ளார். முக்கிய நிர்வாகிகளுடனான சந்திப்பு முடிந்ததும், வந்திருந்த கட்சியினரை 30 பேர் வீதம் குழுவாக சந்தித்து பேசினார். அவர்களிடம், ‘‘9 ஆண்டுகளாக நேரடி அரசியலில் நான் இல்லை. பின்னால் இருந்து தான் இயக்கினேன். தற்போது நேரடியாக அரசியலுக்கு வந்துள்ளேன். தனியாக கட்சி துவங்கியுள்ளது பலருக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கும்.
இதனால், எனக்கு இனிமேல் தான் பிரச்னையே வரும். பலவிதமான தொந்தரவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். எதையும் சந்திக்க நான் தயாராக உள்ளேன். நம்பிக்கை துரோகம் செய்தவர்களுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும். தனித்து போட்டியிட்டாலும் சரி, கூட்டணி வைத்து போட்டியிட்டாலும் சரி, தேர்தலில் போட்டியிட நாம் தயாராக இருக்க வேண்டும். நமது பலத்தை காட்ட வேண்டிய கட்டாயம் நமக்கு உள்ளது’’ என்று கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து விமானம் மூலம் சென்னை கிளம்பி சென்றார்.
