ஆதிதிராவிட விவசாயிகள் நுண்ணீர் பாசன திட்டத்தில் மானியம் பெற அழைப்பு

தர்மபுரி, பிப். 26: தர்மபுரி மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் பாத்திமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தோட்டக்கலை துறை மூலம் சொட்டுநீர் பாசனம் அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மான்யமும், பெரு விவசாயிகளுக்கு 75 சதவிகித மான்யமும் வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக சிறு, குறு விவாசாயிகள் 5 ஏக்கரிலும் (2 எக்டர்) மற்றும் பெரு விவசாயிகள் 12.5 ஏக்கர் (5 எக்டர்) நிலத்தில் சொட்டுநீர் பாசனம் அமைத்து பயன்பெறலாம். தற்போது, இத்திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் பிரிவினருக்கு தர்மபுரி மாவட்டத்தில் கூடுதல் இலக்கு பெறப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் சிட்டா, அடங்கல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், நில வரைபடம், தண்ணீர் மற்றும் மண் ஆய்வறிக்கை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 3 ஆகியவற்றை சொட்டுநீர் பாசன விண்ணப்பத்துடன் இணைத்து, அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் கொடுத்து முன்பதிவு செய்து கொள்ளலாம். குறைந்த அளவு தண்ணீரைக் கொண்டு, அதிக பரப்பில் தோட்டக்கலை பயிர்களை சாகுபடி செய்ய, இத்திட்டத்தை விவசாயிகள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: