சென்னை: மருத்துவர்களை மற்ற தொழிலாளர்கள் போல் கருத முடியாது என்று தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், ஒப்பந்தத்தை மீறி வேறு மருத்துவமனையில் சேர்ந்த மருத்துவரிடம் இருந்து இழப்பீடு வசூலிக்க மத்தியஸ்தரை நியமிக்க கோரி மருத்துவமனை தொடர்ந்த வழக்கை ஒரு லட்ச ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. பிஜி நாட்டில் உள்ள தங்கள் மருத்துவமனையில் இதய நோய் சிகிச்சை மருத்துவராக நியமிக்கப்பட்ட மருத்துவர் பலராமன் பழனியப்பன், ஒப்பந்தத்தை மீறி மூன்று மாத நோட்டீஸ் கொடுக்காமல், வேறு மருத்துவமனையில் சேர்ந்ததால் 42 லட்ச ரூபாய் வட்டியுடன் சேர்த்து இழப்பீடாக வசூலிப்பது தொடர்பாக மத்தியஸ்தர் ஒருவரை நியமிக்க கோரி சென்னையைச் சேர்ந்த தனியார் மருத்துவமனை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மருத்துவர்களை மற்ற தொழிலாளர்கள் போல் கருத முடியாது. மருத்துவமனைகள் இல்லாமல் மருத்துவர்கள் தொழில் செய்ய முடியும். ஆனால், மருத்துவர்கள் இல்லாமல் மருத்துவமனை சேவையாற்ற முடியாது. இந்த வழக்கில் தான் பணியிலிருந்து விலகுவதாக டாக்டர் பலராமன் பழனியப்பன் 3 மாதங்களுக்கு முன்பே மனுதாரரின் மருத்துவமனைக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதை கருத்தில் கொள்ளாமல் மஸ்தியஸ்தம் நடத்த கோருவதை ஏற்க முடியாது. எனவே, மருத்துவமனை தாக்கல் செய்த இந்த வழக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டார்.
