சென்னை: சென்னை டாக்டர் அம்பேத்கர் பெயரில் இயங்கி வந்த பழைய சட்டக் கல்லூரி கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ள புராதன கூடுதல் நீதிமன்ற கட்டிடத்தில் 6 நீதிமன்ற அறைகளில் மார்ச் 2ம் தேதி முதல் வழக்குகள் விசாரிக்கப்பட உள்ளது. சென்னை பாரிமுனையில் உயர் நீதிமன்ற வளாகத்தில் சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்ட கல்லூரி 10 ஆண்டுகளுக்கும் மேல் செயல்பட்டு வந்தது. இந்த நிலையில், கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 12ம் தேதி இரு பிரிவு மாணவர்களுக்கு இடையே கல்லூரி வளாகத்தில் மோதல் ஏற்பட்டது. அதுமட்டுமல்லாமல், பல்வேறு பிரச்னைகளுக்கு சட்ட மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் தொடர்ந்து போக்குவரத்து பாதிப்புகள் ஏற்பட்டது.
இது தொடர்பாக பொது மக்களிடமிருந்து அரசுக்கு தொடர்ந்து புகார் வந்து கொண்டிருந்தது.இதையடுத்து சட்ட மாணவர்கள் மோதல் சம்பவம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சண்முகம் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. நீதிபதி சண்முகம் தலைமையிலான ஆணையம், தற்போது உள்ள இடத்தில் சட்ட கல்லுரியை மூடிவிட்டு புதிய இடத்திற்கு கல்லூரியை இடம் மாற்றம் செய்ய வேண்டும் என்று கடந்த 2009ம் ஆண்டு தமிழக அரசுக்கு அறிக்கை கொடுத்தது. அந்த அறிக்கையை ஏற்றுக் கொண்ட தமிழக அரசு 118 கோடி ரூபாய் செலவில் திருவள்ளூர் மாவட்டம், பட்டரைபெரும்புதூர் கிராமத்தில் ஒரு சட்டக் கல்லூரியும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள புதுப்பாக்கம் கிராமத்தில் மற்றொரு சட்டக் கல்லூரியும் கட்டியுள்ளது.
கடந்த 2018ம் ஆண்டு ஜூலை 9ம் தேதி முதல் புதிய இடத்தில் டாக்டர் அம்பேத்கர் அரசு சட்ட கல்லூரிகள் செயல்படத் தொடங்கின. அதன் பின்னர் உயர்நீதிமன்ற வளாகத்தில் செயல்பட்ட சட்ட கல்லூரி வளாகம் மூடப்பட்டு உயர் நீதிமன்றத்தின் கண்காணிப்பிற்குள் வந்தது. இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் இட நெருக்கடி அதிகரித்து வந்த காரணத்தாலும் புதிய நீதிமன்றங்களின் தேவை ஏற்பட்டதாலும் சட்டக் கல்லூரி செயல்பட்டு வந்த புராதன கட்டிடத்தில் உயர் நீதிமன்றத்திற்கு கூடுதல் நீதிமன்ற அறைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. கடந்த 133 ஆண்டுகள் பழமையான சட்டக் கல்லூரியை பழமை மாறாமல் தொடர்ந்து பயன்படுத்துவதற்கு 23 கோடி ரூபாய் செலவில் புனரமைப்பு செய்யப்பட்டது. புனரமைப்பு பணிகள் அனைத்தும் நிறைவு பெற்று உயர் நீதிமன்றத்திற்காக இந்த கட்டிடத்தில் 6 நீதிமன்ற அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நீதிமன்ற அறைகள் கடந்த ஆண்டு அக்டோபர் 25ம் தேதி திறந்துவைக்கப்பட்டது. இதையடுத்து, இந்த நீதிமன்ற கட்டிடத்திற்கு வழக்கு ஆவணங்கள் கொண்டுவருதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த பணிகள் முடிவடைந்து வரும் 2ம் தேதி முதல் இந்த நீதிமன்ற அறைகளில் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. உயர் நீதிமன்ற நிர்வாக குழு முடிவின் அடிப்படையில் புராதன சட்ட கல்லூரியில் அமைக்கப்பட்ட 6 நீதிமன்ற அறைகள் மார்ச் 2ம் தேதி முதல் செயல்பட தொடங்கும். இந்த நீதிமன்றங்களில் இறுதி விசாரணைக்கு காத்திருக்கும் பழைய ரிட், சிவில், கிரிமினல் வழக்குகள் விசாரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
