ராமேஸ்வரம்: பாம்பன் மீனவர்கள் 12 பேரையும், ஒரு விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் மீண்டும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரம் அருகே பாம்பன் தெற்குவாடி மீன்பிடி துறைமுகத்திலிருந்து நேற்று முன்தினம் நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகுகளில், மன்னார் வளைகுடா கடற்பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். இரவு இந்திய கடல் எல்லை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, 4 ரோந்து படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களை விரட்டியடித்தனர். மேலும், படகுகளை சிறைபிடிக்கும் நோக்கில் சுற்றி வளைத்ததால் மீனவர்கள் வலைகளை வெட்டி கடலிலேயே வீசி விட்டு தப்பினர்.இதில் டேவிட்சன் என்பவரின் விசைப்படகை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். படகில் இருந்த டிரைவர் பிரின்ஸ் ரூபட் (31), மீனவர்கள் கபில் ரோச்சர் (31), ஜான்சன் (45), அந்தோணி பியோ (20), அந்தோணி அஜித் (31), ரீகன் (42), அந்தோணி ரூவிஸ்டன் (44), மோசஸ் (31), பிரிஸ்மென் (27), கிளமென்ட் (25), கெர்சோன் (24), பெரிய கருப்பன் (52) ஆகிய 12 பேரையும் சிறைபிடித்து, தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றனர்.
பின்னர் மேல் நடவடிக்கைக்காக 12 பேரையும் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதனைத்தொடர்ந்து கைதான மீனவர்கள் கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இலங்கை கடற்படையினரின் இந்த தொடர் அத்துமீறல் சம்பவங்கள், பாம்பன் மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரம் தீவில் கடந்த 5 நாட்களில் 34 மீனவர்களையும், 5 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
