இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை: வெளியுறவு துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 12 மீனவர்கள் உள்பட இலங்கை காவலில் உள்ள தமிழ்நாட்டை சேர்ந்த அனைத்து மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிப்பதற்கு உரிய தூதரக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது: ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து, இயந்திர படகில் மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 12 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் நேற்று முன்தினம் (22ம் தேதி) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டை சேர்ந்த மீனவர்கள் மற்றும் அவர்களது மீன்பிடி படகுகள் இலங்கை அதிகாரிகளால் தொடர்ந்து இதுபோன்று சிறைபிடிக்கப்படுவதும், மீனவர்கள் தொடர்ச்சியாக தடுப்புக் காவலில் வைக்கப்படுவதும் மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது. தற்போதைய நிலவரப்படி, தமிழ்நாட்டை சேர்ந்த 259 மீன்பிடி படகுகளும், தற்போதைய சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் உள்பட 116 மீனவர்களும் இலங்கை காவலில் உள்ளனர். இந்த தொடர்ச்சியான கைது நடவடிக்கைகள், கடலோர சமூகத்தினரிடையே வாழ்வாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்து ஆழ்ந்த பதற்றத்தையும், நிச்சயமற்ற தன்மையையும் ஏற்படுத்தியுள்ளன.

நமது மீனவர்கள் இதுபோன்று கைது செய்யப்படுவதை தடுக்க நிலையான மற்றும் உறுதியான தூதரக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம். மேற்கூறியவற்றை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு மீனவர்கள் மீண்டும் கைது செய்யப்படுவதை தடுத்து நிறுத்திடவும், இலங்கை காவலில் உள்ள தமிழ்நாட்டை சேர்ந்த அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் விடுவிப்பதற்கு உரிய தூதரக நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Related Stories: