சென்னை: 2018-19ம் கல்வியாண்டு முதல் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத சென்னைப் பல்கலைக் கழகம் வாய்ப்பு வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் (பொறுப்பு) அருள்வாசு, இணைப்பு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளின் முதல்வர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:கடந்த 2018-19ம் கல்வி ஆண்டு மற்றும் அதற்கு பின்னர் கல்லூரிகளில் சேர்ந்த இளங்கலை, முதுகலை மற்றும் தொழில்சார் படிப்புகளில் சேர்ந்து அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு வழங்கலாம் என பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
அரியர் தேர்வுகள் ஏப்ரல் மாதம் நடத்தப்பட உள்ளன. அரியர் தேர்வுெழுதும் மாணவர்களிடமிருந்து வழக்கமான தேர்வு கட்டணத்துடன் கூடுதலாக அபராத கட்டணமாக இளங்கலை படிப்புக்கு ரூ.7 ஆயிரமும், முதுகலை படிப்புக்கு ரூ.9 ஆயிரமும் தொழில்சார் படிப்புக்கு ரூ.12 ஆயிரமும் வசூலிக்கப்படும். ஏப்ரல் மாதம் நடத்தப்பட உள்ள அரியர் தேர்வுகள் குறித்து தேர்வர்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு கல்லூரிகளின் முதல்வர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
