கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் கபாலீஸ்வரர் கல்லூரிக்கு புதிய கட்டிடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு சொந்த கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து, 2000 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களை வழங்கினார்.
கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ரெட்டேரி சந்திப்பில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் 1.61 கோடி ரூபாய் செலவில் 1,546 சதுரடி கட்டிடப் பரப்பளவில் 54 இருக்கைகள் கொண்ட காத்திருப்புக் கூடம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, கண்காணிப்பு கருவிகள், நவீன கழிப்பறை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள குளிரூட்டப்பட்ட கொளத்தூர் பேருந்து நிறுத்தம் ஆகியவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

மேலும் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் செம்பியம் செங்குன்றம் சாலையில், 40.59 லட்சம் ரூபாய் செலவில் நடைபாதை, இருக்கை வசதிகள், குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள், கண்காணிப்பு கேமராக்கள் வாகனம் நிறுத்துமிடம் என பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள சாலையோர பூங்காவையும் திறந்து வைத்தார். தொடர்ந்து கொளத்தூர் பூம்புகார் நகரில் 31 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். கல்லூரி முழுவதையும் சுற்றி பார்த்தார்.

பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாணவர்களிடம் பேசியதாவது: இன்றைய நாள், என்னை நினைத்து நானே பெருமை கொள்ளக்கூடிய நாள். அதற்கு காரணம், இந்த மாதிரி சிறந்த கல்லூரியை உங்களுக்காக திறந்து வைத்துள்ளேன். எல்லாமே உலகத்தரத்தில் அமைந்துள்ளது. நான் எப்படி வர வேண்டும் என நினைத்தேனோ அதை விட பல மடங்கு சிறப்பாக அமைத்து கொடுத்துள்ளார் சேகர்பாபு. அறநிலையத்துறை சார்பாக கல்வி என்னும் அறப்பணிக்கு இந்த கல்லூரி ஒரு சாட்சியாக இருக்கப்போகிறது. மாணவர்களுக்கு, கல்வி தான் கடவுள்.

கல்வி என்னும் கடவுள் உங்களுக்கு எல்லாம் தரும். படிக்க வேண்டும் அதுதான் உங்களை உயர்த்தும். எல்லாருக்கும் இது பிப்ரவரி மாதம். ஆனால் தி.மு.க.,வுக்கு இது மாநாடு மாதம். அந்தளவு கடந்த 20 நாட்களாக தமிழகம் முழுதும் சுற்றி வருகிறேன். கொளத்தூர் வந்து விட்டால், ஒரு நிகழ்ச்சி மட்டுமல்ல 10 நிகழ்ச்சியில் பங்கேற்கிறேன். காலையில் கூட ஒரு கருத்தரங்கை முடித்து விட்டு தான் இங்கு வந்தேன். மற்றவர்களுக்கு தொகுதிக்கு போய் வேலையை முடித்து விட்டு வந்தால் உற்சாகமாவர். ஆனால் எனக்கு கொளத்தூர் வருவது தான் உற்சாகம். திராவிட மாடல் அரசின் மாடல்தொகுதியாக கொளத்தூர் உள்ளது. எல்லா வகையிலும் தன்னிறைவு பெற்ற தொகுதியாக உள்ளது.

தேர்தல் வரும் போது ஒன்றிரண்டு திட்டங்கள் மட்டுமின்றி, கடந்த ஐந்தாண்டுகளாக தேவையான எல்லாவற்றையும் செய்துள்ளோம். இந்த தொகுதியில், முதல்வர் படைப்பகம், பெரியார் நகர் அரசு மருத்துவமனை என பல வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக இன்று ஏ.சி., பஸ் ஸ்டாப், சாலையோர பூங்கா, நியாயவிலைக்கடை, ஒருங்கிணைந்த வளர்ச்சி மைய கட்டிடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 2,007 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கினோம். 31.45 கோடி ரூபாய் செலவில் இந்த கல்லூரிக்கு புதிய கட்டம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இங்கு பயின்றி மாணவர்களில் 516 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்ட திட்டங்களை தொடங்கி வைத்துள்ளோம். இன்னும் 100 திட்டப்பணிகள் நடந்து வருகிறது. கொளத்தூர் மட்டுமல்ல, தமிழகத்தின் ஒவ்வொரு ஊரிலும் முன்னேற்ற பணிகள் நடந்து வருகிறது. இதுதான் திராவிட மாடல். திராவிட மாடல் பற்றி கேட்பவர்களுக்கு இது தான் பதில். மக்களாட்சியாக திராவிட மாடல் பெயர் எடுத்துள்ளது. உங்கள் ஆதரவு என்றும் எங்களுக்கு இருக்கும் என்ற நம்பிக்கையுடன் விடை பெறுகிறேன். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

Related Stories: