கோயில் திருவிழாக்களில் சிறு வியாபாரிகள் உள்நாட்டு பொருட்களை விற்க அனுமதிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கோயில் திருவிழாக்களில் சிறு வியாபாரிகளும் உள் நாட்டு பொருட்களை விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் மாசி திருவிழா வரும் மார்ச் 11ம் தேதி முதல் மார்ச் 13ம் தேதி வரை நடைபெற உள்ளது. இத்திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு முறையான குடிநீர், கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேற்கொள்ளவும், தற்காலிக கடைகளை முறைப்படுத்த கோரியும் சேலத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

வழக்கு நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த கோயிலின் மாசி திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு கழிப்பறைகள், குடிநீர் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பிற்காக போதுமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். திருவிழாவில் தற்காலிக கடைகள் அமைக்க டெண்டர் கோரப்பட்டபோது ஒருவர் மட்டுமே டெண்டர் கேட்டுள்ளதால் மீண்டும் புதிதாக டெண்டர் விட உள்ளதாக தெரிவித்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, மாசி திருவிழாவில் குடிநீர், மற்றும் போதுமான கழிப்பிட வசதிகளை உறுதி செய்ய வேண்டும். கோயில் திருவிழா என்பது சடங்கு மட்டுமல்ல, அது ஒரு கலாச்சார நிகழ்வாகும். இந்த மாதிரியான திருவிழாக்களின் போது சிறிய வியாபாரிகள் நம் நாட்டின் பொருட்களை விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு வெளிப்படை தன்மை என்ற பெயரில் அதிக விலைக்கு டெண்டர் கேட்டால் அது சாதாரண சிறு வியாபாரிகளை பாதிக்கும். அதனால் அதிக விலைக்கு டெண்டர் குறிப்பிடாமல் சிறு வியாபாரிகள் பங்கேற்கும் வகையில் டெண்டர் கோர வேண்டும். இல்லாவிட்டால் கோயில் தனது கலாச்சார மதிப்பை இழந்து விடும். கோயில் திருவிழாக்களை வருவாய் ஆதாரமாக மட்டும் பார்க்காமல், திருவிழாக்களில் உள் நாட்டு பொருட்களை விற்பனை செய்ய சிறுவியாபாரிகள், பெண்கள், பழங்குடியினர்களை ஊக்குவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Related Stories: