2021ம் ஆண்டு ஜூன் 21ம் தேதி தொடங்கி இதுவரை 161 நாட்கள் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத் தொடர்: 5 ஆண்டுகளாக ஒரு நாள் கூட தவறாமல் அவை நடவடிக்கையில் பங்கேற்ற 18 எம்.எல்.ஏ.க்கள்: சபாநாயகர் அப்பாவு தகவல்

சென்னை: சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் 2021ம் ஆண்டு ஜூன் 21ம் தேதி தொடங்கி நேற்றுமுன்தினம் வரை மொத்தம் 161 நாட்கள் நடைபெற்றுள்ளன என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். 2026-27ம் நிதியாண்டிற்கான இடைக்கால நிதி நிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதங்கள் நேற்று முன்தினத்துடன் நிறைவு பெற்றது. இதையடுத்து 16வது சட்டப்பேரவை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக, 16வது சட்டப்பேரவை கூட்டத்தின் நிறைவு நாளில் சபாநாயகர் அப்பாவு அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்து பேசியதாவது:

சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் 2021ம் ஆண்டு ஜூன் 21ம் தேதி தொடங்கி நேற்று வரை மொத்தம் 161 நாட்கள் நடைபெற்றுள்ளன. 17 நாட்கள் மாலையில் கூட்டம் நடைபெற்றது. அந்த வகையில் 770 மணிநேரம் நேற்றுமுன்தினம் பகல் 1.44 மணிவரை அவை நடைபெற்றது. மேலும் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானங்களின் மீது 109 எம்.எல்.ஏ.க்கள் பேசினர். அவர்களின் ஆளும் கட்சியினர் 47 பேர் 10 மணி 46 நிமிடங்களும், மற்ற கட்சியினர் 62 பேர் 29 மணி 18 நிமிடங்கள் பேசினர்.

இதர கட்சியினருக்கு கூடுதலாக 18 மணி 32 நிமிடம் பேசுவதற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலுரை 4 மணி 11 நிமிடங்கள் நீடித்தது. பட்ஜெட், வேளாண் பட்ஜெட் ஆகியவற்றின் மீது 22 நாட்கள் பொது விவாதம் மற்றும் பதிலுரை நடைபெற்றது. அதில் 134 பேர் பங்கேற்று 54 மணி 27 நிமிடங்கள், ஆளுங்கட்சியினர் 63 பேர் 18 மணி 23 நிமிடங்கள், இதர கட்சியினர் 71 பேர் 36 மணி 4 நிமிடங்கள் பேசினர். இதர கட்சியினருக்கு கூடுதலாக 17 மணி 41 நிமிடம் நேரம் பேசுவதற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

அரசுத் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது 84 நாட்கள் விவாதமும், வாக்கெடுப்பும் நடந்தது. அதில் 725 பேர் உரையாற்றினர். அவர்கள் 206 மணி 9 நிமிடங்கள் உரையாற்றினர். ஆளுங்கட்சியினர் 369 பேர் 91 மணி 43 நிமிடங்களும், இதர கட்சியினர் 356 பேர் 114 மணி 26 நிமிடங்களும் பேசினர். இதர கட்சியினருக்கு கூடுதலாக 22 மணி 43 நிமிட நேரம் பேசுவதற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. முதல்வர் தனது பொறுப்பில் உள்ள துறைகள் சம்பந்தமாக 3 மணி 54 நிமிடங்கள் பதிலளித்தார்.

இதர துறைகள் தொடர்பான விவாதங்களிலும் 63 முறை 1 மணி 9 நிமிடங்கள் பதிலளித்தார். அமைச்சர்கள் 105 மணி 35 நிமிடங்கள் பதிலுரையாற்றியுள்ளனர். 33,225 வெட்டுத் தீர்மானங்கள் (துணை மானியக் கோரிக்கை உள்பட) வரப்பெற்றன. அவற்றில் 30,224 அனுமதிக்கப்பட்டு, அவையில் 9,164 முன்மொழியப்பட்டன. 185 எம்.எல்.ஏ.க்கள் 2 லட்சத்து 53 ஆயிரத்து 935 வினாக்கள் அளித்தனர். அவற்றில் 65,024 வினாக்கள் அனுமதிக்கப்பட்டன.

அவற்றில் பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் ஜி.கே.மணி 66,974 வினாக்கள், அருள் 38,323 வினாக்கள், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தாயகம் கவி 33,023 வினாக்கள், பிரபாகரராஜா 21,041 வினாக்கள், அரவிந்த் ரமேஷ் 15,318 வினாக்களையும் கேட்டிருந்தனர். அதிக அளவு வினாக்களுக்கு விடையளித்த அமைச்சர்களில் முதல் 5 நிலைகளில் இருப்பவர்கள் முறையே சேகர்பாபு, கே.என்.நேரு, எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், துரைமுருகன் ஆகும். எம்.எல்.ஏ.க்களிடம் இருந்து 5,589 கவன ஈர்ப்புகள் கொண்டு வரப்பட்டு 689 அனுமதிக்கப்பட்டன.

அதில் 105 பேர் பேசினர். 230 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. 14 மசோதாக்கள் திருப்பி அனுப்பப்பட்டு, மறு ஆய்வு செய்து மீண்டும் நிறைவேற்றப்பட்டன. அவற்றில் 4 திரும்பப் பெறப்பட்டன. அவை விதி 110-ன் கீழ் 37 அறிக்கைகள் அளிக்கப்பட்டன. அவற்றில் முதல்வர் அளித்தது 36 ஆகும். அமலு, அரவிந்த் ரமேஷ், வி.ஜி.ராஜேந்திரன், பிரின்ஸ், முகமது ஷாநவாஸ் உள்பட 18 எம்.எல்.ஏ.க்கள் 5 ஆண்டுகளாக ஒரு நாள் கூட தவறாமல் அவை நடவடிக்கையில் பங்கேற்றனர். பார்வையாளர் மாடத்தில் 70,959 பேர் அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.

முதல் முறையாக சட்டமன்ற நிகழ்வுகள் 2022ம் ஆண்டு ஜனவரி 5ம் தேதி முதல் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டன. பெண்களின் முன்னேற்றத்தை தமிழகத்தின் முன்னேற்றமாக பார்த்த அரசு இது இந்த ஆட்சியின் முக்கியமான அடையாளங்களில் ஒன்று, பெண்களை பயனாளிகளாக அல்ல, சுயநிலையுடன் செயல்படக்கூடிய சமூக சக்தியாக மாற்றியதுதான். இவ்வாறு அவர் பேசினார்.

* 70,959 பார்வையாளர்கள் கடந்த 5 ஆண்டுகளில் பார்வையாளர்கள் மாடத்தில் அனுமதிக்கப்பட்டவர்கள் ஆண்கள் 61,235, பெண்கள் 9,724 என மொத்தம் 70,959 பார்வையாளர்களாக அனுமதிக்கப்பட்டனர்.

* அனைத்து நாட்களிலும் பேரவைக்கு வந்தவர்கள்
2021ம் ஆண்டு மே 11ம் தேதி முதல் 5 ஆண்டுகளில் பேரவைக் கூட்டம் நடைபெற்ற அனைத்து நாட்களும் பேரவைக்கு வருகை புரிந்த உறுப்பினர்கள் பட்டியல் அமலு, அரவிந்த் ரமேஷ் வி.ஜி.ராஜேந்திரன், இளங்கோ ஈ.ஆர்.ஈஸ்வரன், உதயசூரியன், ஜே.ஜே.எபினேசர் (எ) ஜான் எபினேசர், இ.கருணாநிதி, சுதர்சனம், க.சுந்தர், வி.சி.சந்திரகுமார், எ.எம்.வி.பிரபாகர ராஜா, ஜே.ஜே.பிரின்ஸ், மார்க்கண்டேயன், முகமது ஷாநவாஸ், முத்துராஜா, ராமலிங்கம், ஜோசப் சாமுவேல் அனைத்து நாட்களும் பேரவைக்கு வந்தனர்.

* தொடுதிரை கணினி
காகிதமில்லா சட்டமன்றம் என்ற இலக்கினை எய்திடும் வகையில் நேவா திட்டத்தின்கீழ் சட்டமன்ற பேரவைக் கூட்டம் புனித ஜார்ஜ் கோட்டையிலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் நடைபெறுவதற்கு ஏதுவாக உறுப்பினர்களின் மேசைகளின் மீது கையடக்க தொடுதிரை கணினிகள் பொருத்தப்பட்டன.

சட்டமன்றம் கூடிய அனைத்து நாட்களிலும் சட்டமன்ற உறுப்பினர்களின் பயன்பாட்டிற்கென வழங்கப்படும் அனைத்து ஆவணங்களும் தொடுதிரைக் கணினிகளில் பதிவேற்றம் செய்யப்பட்டன. இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தியமைக்கான சான்றிதழ் ஒன்றிய அரசால் தமிழக சட்டமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: