பவானி தொகுதியின் சிட்டிங் எம்எல்ஏவாக அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் உள்ளார். இவர், தனக்கு மீண்டும் இதே தொகுதியில் சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், பிரசாரத்திற்கான முதற்கட்ட பணிகளை துவங்கியிருக்கிறார். இந்நிலையில், தனக்கு நெருக்கமாக இருக்கும் முக்கிய நிர்வாகிகளையும், நம்பிக்கைக்குரியவர்களையும் அழைத்து, தேர்தலுக்கான பிரசாரத்தை எவ்வாறு மேற்கொள்வது என்று ஆலோசனை நடத்தியிருக்கிறார். அப்போது, பணம் பட்டுவாடா செய்யாமல் உறுதியாக வெற்றி பெற முடியாது என்று நிர்வாகிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி, கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் பாஜவுடன் கூட்டணி வைத்ததே ஆட்சியை இழந்ததற்கான காரணம் என்று கே.சி.கருப்பணனிடம் கூறிய நிர்வாகிகள், அதிமுக தலைமை என்ன சொன்னாலும் சரி, பாஜவில் யாரை வைத்து வேண்டுமானாலும் பிரசாரம் செய்துகொள்ளட்டும். ஆனால், பவானி தொகுதியில் நாம் பிரசாரம் மேற்கொள்ளும் போது, பாஜவினர் நமக்கு ஆதரவாக வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என எச்சரித்து இருக்கின்றனர்.
ஏனென்றால், பாஜவின் மீது பொதுமக்கள் இயல்பாகவே அதிருப்தியில் உள்ளனர்.
அதனால், கூட்டணியில் இடம் பெற்றிருக்கிற எந்த கட்சி வேண்டுமானாலும் ஆதரவாக பிரசாரம் செய்யட்டும். பாஜ மட்டும் வேண்டாம். அப்படி அவர்கள் வந்தால், நாம் தோற்பதற்கு அதுவே வழிவகுக்கும் என நிர்வாகிகள் அட்வைஸ் செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அதிமுக தலைமையோ பாஜவினரை பிரசாரத்திற்கு அழைத்து செல்ல வேண்டும் என கூறி வருகிறது. கட்சி நிர்வாகிகளோ பாஜவினர் வேண்டாம் எனக்கூறுவதால் செய்வதறியாமல் கே.சி.கருப்பணன் தவித்து வருகிறார்.
