நாமக்கல்லில் 2 தொகுதிகளுக்கு குறிவைக்கும் பாஜ மாநில துணை தலைவர்களுக்காக தங்கமணியுடன் எல்.முருகன் பேச்சு

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், குடும்பத்தினருடன் நேற்று சுவாமி தரிசனம் செய்தார். அப்போது பிரதமர் மோடி பெயரில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து இணை அமைச்சர் எல்.முருகன் நிருபர்களிடம் கூறுகையில், மதுரையில் வரும் 1ம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசுகிறார். இந்த கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்கிறார் என்றார்.

இதையடுத்து ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் நாமக்கல் சுற்றுலா மாளிகைக்கு சென்றார். அங்கு அவரை சந்தித்து அதிமுக முன்னாள் அமைச்சரும், நாமக்கல் மாவட்ட அதிமுக செயலாளருமான தங்கமணி பேசினார். இருவரும் தனியாக ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினர். நாமக்கல் மாவட்டத்தில் 6 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இதில் திருச்செங்கோடு தொகுதியில் பாஜ மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம், ராசிபுரம் தொகுதியில் பாஜ மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி ஆகியோர் போட்டியிட காய்நகர்த்தி வருகின்றனர்.

அதிமுகவின் வாக்கு கணிசமாக உள்ள இந்த இரு தொகுதிகளிலும் பாஜவின் மாநில துணைத்தலைவர்கள் குறிவைத்து கேட்பது, அக்கட்சியினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இருவரும் மாநில துணைத்தலைவர்கள் என்பதால் அதிமுகவிடம் இந்த தொகுதிகளை கேட்டு பாஜ மேலிடமும் குடைச்சல் கொடுத்து வருகிறது. எனவே இதற்கான முடிவை எடுக்கும் பொறுப்பை பிரதமருக்கு நெருக்கமான தங்கமணியிடம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒப்படைத்துள்ளார். இதன்காரணமாகவே எல்.முருகனும், தங்கமணியும் ஒரு மணி நேரம் தனியாக சந்தித்து பேசியுள்ளனர் என்பது கட்சியின் மூத்த நிர்வாகிகள் வெளியிட்ட தகவல்.

Related Stories: