விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி, மதுரை விமான நிலையத்தில் நேற்று அளித்த பேட்டி: அதிமுக பாஜவின் பிடிக்குள் போய்விட்டது. மெல்ல மெல்ல காவிமயமாகிறது. அதற்கு சான்றாகத்தான் எடப்பாடி பழனிசாமியின் திருவள்ளுவர் காவி அணிந்த பதிவு அமைந்திருக்கிறது. பெரியார் பாசறையில் தோன்றிய இயக்கம், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் தலைமையில் இயங்கிய ஒரு திராவிட இயக்கம். சங்பரிவார்களின் பிடியில் சிக்கி இருப்பது கவலை அளிக்கிறது. அதிமுக வெற்றி பெற்றால் ஆர்எஸ்எஸ் தான் ஆளும்.
திருவள்ளு வருக்கு காவி பூசும் அளவு எடப்பாடியின் பதிவு மாறியிருப்பது வேதனை அளிக்கிறது. அதிமுக தலைவர்கள் கவனமாக எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். இல்லையேல் அவர்கள் தமது சுய அடையாளத்தை இழக்க நேரிடும். இந்தியை விரும்பி படிக்கிற யாருக்கும் எதிராக இங்குள்ள அரசியல் கட்சிகள் செயல்படவில்லை. அரசியல் கொள்கையாகவும், ஒன்றிய ஆட்சியாளர்களின் கொள்கை செயல் திட்டமாகவே பிற மாநிலங்கள் மீது திணிப்பது தான் அரசியல் நோக்கம். அந்த அரசியல் நோக்கத்தை எதிர்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
* ஓபிஎஸ் வந்தால் மகிழ்ச்சி
திருமாவளவன் கூறுகையில், கூட்டணி தொகுதி பங்கீடு தொடர்பாக உரிய நேரத்தில் தோழமைக் கட்சிகளை அழைத்துப் பேசுவார்கள். அப்போது விடுதலைச்சிறுத்தைகளிடமும் பேசுவார்கள். அப்போது எங்களுக்கான தொகுதிகளை கேட்டு பெறுவோம். சுமூகமான முறையில், நல்லிணக்கமான முறையில் இந்த பேச்சுவார்த்தை அமையும் என்று நான் நம்புகிறேன். திமுக கூட்டணி இப்போது மேலும் வலுவடைந்திருக்கிறது. தேமுதிக இந்த கூட்டணியில் இணைந்திருப்பதை விசிக மனப்பூர்வமாக வரவேற்கிறது.
ஓபிஎஸ் தலைமையிலான அணியும் திமுக கூட்டணிக்கு வரும் வாய்ப்பிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. கூட்டணிக்கு ஓபிஎஸ் வந்தால் மிக்க மகிழ்ச்சி. திமுக – காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி தொடரும். இந்த கூட்டணியின் வெற்றிக்கு காங்கிரஸ் ஒத்துழைப்பாக இருக்கும் என்று நம்புகிறேன். இப்போதைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து ஜனநாயக சக்திகளும் ஓரணியில் நிற்கவேண்டும் என்பது தான் முதன்மையானது. வெற்றிக்கு குந்தகம் விளைவிக்கும் எந்தவித முயற்சியும் நாம் செய்யக்கூடாது என்பது தான் என்னுடைய வேண்டுகோள் என்றார்.
