சொன்னாரு..! செஞ்சாரு..!! மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.2,756 கோடி கடன் தள்ளுபடி

சொன்னாரு: திமுக தேர்தல் அறிக்கையில் கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் பெற்றிருந்த ரூ.2,756 கோடி கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

செஞ்சாரு: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு, பெண்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தாக்கல் செய்யப்பட்ட திருத்த நிதிநிலை அறிக்கையில், கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் வாங்கிய கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

கூட்டுறவு துறையின்கீழ் இயங்கும் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடன்களுக்கு மட்டும் தள்ளுபடி செய்யப்பட்டன. இதன் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள 15.88 லட்சத்திற்கு அதிகமான பெண்கள் நேரடியாக பயன் அடைந்தனர். சுமார் 1.01 லட்சம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் கடன் தள்ளுபடி வரம்பிற்குள் கொண்டுவரப்பட்டன. 2021 மார்ச் 31ம் தேதி அல்லது அதற்கு முன்னதாக கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகளில் பெறப்பட்டு நிலுவையில் இருந்த கடன்கள் மட்டுமே தள்ளுபடிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை பெண்கள் சிறு தொழில் தொடங்கவும், குடும்ப தேவைகளுக்காகவும் வாங்கிய கடன்களால் ஏற்பட்ட வட்டி சுமையை தீர்க்க எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது. மேலும் தமிழக அரசின் இந்த நடவடிக்கை மாநிலத்தின் உள்ளடக்க வளர்ச்சி என்ற இலக்கை எட்டுவதில் மிக முக்கிய பங்கு வகிப்பதாக பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

* கடன் உச்ச வரம்பு உயர்வு
கூட்டுறவு வங்கிகளில் மகளிர் குழுக்களின் கடன் உச்ச வரம்பு அரசின் தள்ளுபடிக்கு பின்னர் உயர்த்தப்பட்டது. அதாவது ரூ.10 லட்சம் வரை கொடுக்கப்பட்டு வந்த நிலையில் அதனை ரூ.20 லட்சமாக உயர்த்தி அரசு வழங்கியது. ஒரு சில இடங்களில் குழுக்களின் தேவைகளை பொருத்து ரூ.30 லட்சம் வரை கடன் வரம்பு உயர்த்தி வழங்கப்பட்டுள்ளன.

* அதிகப்படியாக பயனடைந்த முதல் 3 மாவட்ட விவரம்
* சேலம்: தமிழகத்திலேயே மிக அதிகப்படியாக ரூ.134.40 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் 51,023 (5,241 குழு) பெண்கள் பயனடைந்துள்ளனர்.
* தூத்துக்குடி: ரூ.75 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டு 2,420 குழுக்கள் பயன்.
* கள்ளக்குறிச்சி: விவசாய கடன்களுடன் சேர்த்து பெருமளவிலான சுய உதவிக்குழுக்களின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டன.

* புதிய கடன் இலக்கு
2025-26க்கான பட்ஜெட்டில், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.37,000 கோடி அளவிற்கு வங்கிக் கடன் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய 2024-25 நிதியாண்டில் இந்த இலக்கு ரூ.35,000 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

* நிதி ஒதுக்கீடு
* தொடக்கத்தில் 2021-22 ஆண்டு பட்ஜெட்டில் ரூ.600 கோடி முதற்கட்டமாக ஒதுக்கீடு.
* கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் மொத்தம் ரூ.2,118.80 கோடி வரை கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்பட்டு அதற்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன.
* கடந்த மாதம் இந்த வட்டி தொகைக்காக ரூ.194 கோடி நிதி அரசு விடுவித்தது.

Related Stories: