சென்னை: சென்னையில் நடந்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் 11 ஆயிரம் மாணவர்களுக்கு இலவச டிக்கெட் வழங்கப்பட்டது. உலகின் இரண்டாவது பழமையான கிரிக்கெட் மைதானங்களில் ஒன்றான சென்னையின் புகழ்பெற்ற எம்ஏ சிதம்பரம் மைதானம் திகழ்கிறது. தற்போது இங்கு சர்வதேச ஆண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை நடந்து வருகிறது. இதில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ஏற்பாடு செய்திருந்த சிறப்பு மாணவர் விழாவில் 45 கல்வி நிறுவனங்களிலிருந்து வந்த 11,860 மாணவர்கள் பங்கேற்று ரசித்தனர்.
டி20 உலகக் கோப்பை போட்டிகள் இந்தியா மற்றும் இலங்கையில் இணைந்து நடத்தப்படுகின்றன. இதில் சேப்பாக்கம் மைதானம் முக்கியமான போட்டிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த வரலாற்று சிறப்பான தருணத்தை இளைஞர்கள் நேரில் உணரவேண்டும், கிரிக்கெட் மீதான ஆர்வம் இளம் தலைமுறையினரிடையே மேலும் வலுப்படவேண்டும் என்ற நோக்கோடு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் இந்த சிறப்பு மாணவர் சந்திப்பை ஏற்பாடு செய்தது.
இதில், சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் உள்ள 45 கல்வி நிறுவனங்களிலிருந்து பள்ளிகள், கல்லூரிகள் உள்பட 11,860 மாணவ, மாணவியர் இந்த சிறப்பு நிகழ்வில் கலந்துகொண்டனர். அதாவது கடந்த 7 போட்டிகளில் ஒரு கிரிக்கெட் மைதானத்தில் மாணவர்கள் கூடிய சிறப்பான தருணமாக பதிவாகியுள்ளது. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மாணவர்களுக்கு வெறுமனே போட்டியை காண மட்டுமே வாய்ப்பளிக்கவில்லை.
அவர்களது ஒட்டுமொத்த அனுபவமும் சிறப்பாக அமைய வேண்டும் என்று பல்வேறு ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்திருந்தது. குறிப்பாக இலவச சிற்றுண்டி மற்றும் குடிநீர் அனைத்து மாணவர்களுக்கும் இலவசமாக வழங்கப்பட்டது. மேலும் மாணவர்களுக்கு கிரிக்கெட் பற்றிய விழிப்புணர்வு செயல்பாடுகளும், சேப்பாக்கம் மைதானத்தின் வரலாறு பற்றிய தகவல்களும் வழங்கப்பட்டது. நிகழ்வில் பங்கேற்ற மாணவர்கள் தங்கள் உணர்வுகளை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர்.
டிவியில் பார்த்த சேப்பாக்கத்தை இன்று கண்ணால் பார்த்தோம். இந்த அனுபவம் வாழ்நாளில் மறக்க மாட்டோம் என்று ஒரு மாணவன் உற்சாகமாக கூறினான். இதுகுறித்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தெரிவிக்கையில், வருங்கால கிரிக்கெட் வீரர்கள் இந்த மண்ணிலிருந்தே உருவாக வேண்டும். சுனில் கவாஸ்கர், கபில் தேவ், சச்சின் டெண்டுல்கர் முதல் இன்றைய தோனி, விராட் கோலி வரை பலர் இந்த மைதானத்தில் தங்கள் திறமையை வெளிப்படுத்தியுள்ளனர்.
இன்றைய மாணவர்களில் யாராவது நாளை இந்த மைதானத்தில் இந்தியாவுக்காக விளையாடுவார்கள் என்ற நம்பிக்கையோடு இந்த நிகழ்வை நடத்தினோம். கிரிக்கெட்டின் மீதான அன்பை இளம் தலைமுறையிடம் விதைப்பது நம் கடமை. மேலும், ‘‘45 கல்வி நிறுவனங்களிலிருந்து 11,860 மாணவர்கள் வந்தது எங்களுக்கே ஆச்சரியமாக இருக்கிறது. மக்களின் ஆதரவும் அன்பும் எங்களை மேலும் உற்சாகப்படுத்துகிறது.
இதுபோன்ற மேலும் பல சமூக சேவை நிகழ்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டு மட்டுமல்ல. அது ஒரு உணர்வு, ஒரு கலாச்சாரம், ஒரு ஒற்றுமையின் சின்னம் என்பதை இந்த நிகழ்வு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இவ்வாறு தெரிவித்தனர்.
