மனிதம், மனிதர்களை அழித்து ஆட்சியை பிடிக்க நினைக்கும் பாஜவின் பிடியில் தமிழ்நாடு சிக்கக்கூடாது: மநீம.வின் ‘மறவோம்’ நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

மதுரை: மனிதம், மனிதர்களை அழித்து ஆட்சியை பிடிக்க நினைக்கும் பாஜவின் பிடியில் தமிழ்நாடு சிக்கக்கூடாது என மநீம சார்பில் நடந்த ‘மறவோம்’ நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். மதுரை காந்தி மியூசியத்தில் நேற்று மாலை மக்கள் நீதி மய்யம் சார்பில் ‘மறவோம்’ என்ற தலைப்பில் காந்தியடிகளை நினைவுகூரும் நிகழ்ச்சி நடந்தது.

இதில் அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் எம்பி, காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் செயலாளர் சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் வீரபாண்டியன், முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன், மமக தலைவர் ஜவாஹிருல்லா, கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன், தவாக தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: காந்தியை மக்கள் மனதில் இருந்து எப்படியாவது அகற்றி விடவேண்டுமென இன்றைய ஒன்றிய பாஜ அரசு திட்டமிட்டு துடித்துக் கொண்டிருக்கிறது. காந்திய கொள்கைகளை அழிக்க வேண்டுமென்ற நிலையில் இருந்து, இப்ப காந்தி என்ற பெயரே இருக்கக் கூடாது என்ற இடத்திற்கு நகர்ந்துள்ளனர். இதற்கு எடுத்துகாட்டுதான், நூறு நாள் வேலைதிட்டத்தில் இருந்து காந்தியின் பெயரை நீக்கினர். அடுத்து ரூபாய் நோட்டுல இருந்து காந்தி படத்தை எடுத்தாலும் எடுத்துவிடுவர்.

மதத்தை வைத்து அரசியல் நடத்தும் அற்பர்களுக்கு காந்தியை பிடிப்பதில்ைல. அண்மையில் பாஜ முதல்வரே முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையை தூண்டுவதை பார்த்திருப்பீர்கள். இதை சொல்லவே நமக்கு வெட்கமாக உள்ளது. ஆனால், எந்த வெட்கமும் இல்லாமல், இப்படியான செயல்களில் அவர்கள் ஈடுபடுகிறார்கள். சமூகரீதியாக, கல்விரீதியாக, பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு இருக்கக் கூடாது என நினைக்கிறார்கள்.

கிறிஸ்துமஸ் அன்று கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்துகிறார்கள். மாற்றுத்திறனாளி என பார்க்காமல் சிறுமி மீது தாக்குதல் நடத்துகிறார்கள். தமிழ்நாட்டிலும் இதுபோன்ற சம்பவங்களை அரங்கேற்ற வெறி பிடித்து அலைகின்றனர். நம்ம அரசும், தோழமை கட்சிகளும் இருக்கும் வரை அதை நாங்கள் நடக்க விடமாட்டோம். மதம் பிடிக்காமல், மக்களை பக்குபடுத்துவது தான் எங்களின் வேலை. மதவெறி புகுந்தால் முதலில் சாவது மனிதம் தான்.

இதை நாம் முழுவதுமாக உணர்ந்ததால் தான் வெறுப்பை புறந்தள்ளி தமிழ்நாடு வளர்ச்சி பாதையில் போகிறது. மனிதத்தையும், மனிதர்களையும் அழித்து ஆட்சியை பிடிக்க நினைக்கும் பாஜவின் பிடியில் தமிழ்நாடு சிக்கக் கூடாது. இந்த தேர்தல் தமிழ்நாடு வெர்சஸ் என்டிஏ. அதில் தமிழ்நாடு வெல்லும். பாஜ தமிழ்நாட்டிற்கு தேவையில்லை. பெரியாரின் பகுத்தறிவு, சமூகநீதி தான் தமிழ்நாட்டிற்கு தேவை. இந்தியாவிற்கும் தேவை.

அந்த அடிப்படையில் தான் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் கமலின் மநீமவும் இணைந்துள்ளது. சிலர் சொல்வார்கள் கமல் பேசுவது புரியவில்லை என்று. அவர்கள் புரியாமல் அல்ல, புரிந்து கொள்ளக் கூடாது என்பதற்காக பேசுகிறார்கள். மீடியா மைக் முன் புலம்பியவர்கள், இப்போ நாடாளுமன்ற மைக் முன் புலம்புகிறார்கள். அவர்களை புலம்ப வைத்துவிட்டார். அதற்காக எனது பாராட்டும், வாழ்த்துகளும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: