மரக்காணம், பிப். 21: மரக்காணம் அருகே பெரிய மண்டவாய் கிராமத்தை சேர்ந்த வீர முத்து மகன் சித்தரஞ்சன்(14), வெங்கடேசன் மகன் வெற்றி செல்வன்(14). இந்த 2 மாணவர்களும் ஒரு தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தனர். இவர்கள் கடந்த 17ம் தேதி வட அகரம் பகுதியில் உள்ள மணல் குவாரி பள்ளத்தில் குளித்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக 2 மாணவர்களும் பரிதாபமாக தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டனர். இது குறித்து மாணவர்களின் உறவினர்கள் மரக்காணம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் பேரில் மரக்காணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் தண்ணீரில் மூழ்கி பலியான மாணவர்களின் குடும்பத்திற்கு அரசு சார்பில் இழப்பீடு வழங்க வேண்டும்.
அப்பகுதியில் நடக்கும் மணல் கொள்ளையை தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினர், பொதுமக்கள் மரக்காணம் அருகே மண்டவாய் பகுதியில் இசிஆர் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்த மரக்காணம் வருவாய்த்துறையினர் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மறியல் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து மேலதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்துச் சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனை ஏற்று பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் புதுவை-சென்னை இசிஆர் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
