சியோல்: தென் கொரியாவில் கடந்த 2024ல் ராணுவச் சட்டத்தை அறிவித்த முன்னாள் அதிபர் யூன் சுக் இயோல்-க்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தென் கொரிய நாட்டின் முன்னாள் அதிபர் யூன் சுக் இயோல் கடந்த 2024ல் தொலைக்காட்சியில் உரையாற்றிய போது திடீரென ராணுவ சட்டத்தை அறிவித்தார். இதையொட்டி ஏற்பட்ட பதற்றத்தால் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. கடந்த ஜனவரி மாதம் வழக்கு விசாரணை நடந்தது. அப்போது, வாதாடிய அரசாங்க வழக்கறிஞர்கள்,யூன் சுக் இயோலின் அரசமைப்பு சட்டத்திற்கு எதிரான அவசர கால ராணுவ சட்டம், நாடாளுமன்ற செயல்பாட்டையும், தேர்தல் ஆணையத்தையும் முடக்கும் விதமாக நடந்து கொண்டார்.எனவே அவருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
இந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி யூன் சுக் இயோலுக்கு ஆயுள் தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து யூன் சுக் இயோல் மேல்முறையீடு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பும் சாதகமாக இல்லையென்றால் அவர் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யலாம்.
