சர்வதேச பாலியல் குற்றவாளி எப்ஸ்டீனுடன் தொடர்பு இங்கிலாந்து மன்னரின் தம்பி கைது: பிரிட்டன் போலீஸ் அதிரடி நடவடிக்கை

லண்டன்: சர்வதேச பாலியல் குற்றவாளி எப்ஸ்டீன் ஆவணங்களில் சிக்கியுள்ள பிரிட்டன் முன்னாள் இளவரசரும், இங்கிலாந்து மன்னர் சார்லசின் தம்பியுமான் ஆண்ட்ரூ அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் போலீசார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவில் சிறுமிகளை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதற்காக கைதான தொழிலதிபர் ஜெப்ரீ எப்ஸ்டீன் கடந்த 2019ல் மர்மான முறையில் சிறையில் மரணமடைந்தார். எப்ஸ்டீனுடன் பல்வேறு நாடுகளின் தலைவர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் உரையாடிய இ-மெயில்கள், பகிர்ந்த வீடியோக்கள், புகைப்படங்கள் ஆகியவற்றை வெளியிட அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதையடுத்து கடந்த ஜனவரியில் 35 லட்சம் பக்கங்களை கொண்ட எப்ஸ்டீன் கோப்புகளை அமெரிக்க நீதித்துறை வெளியிட்டது. அந்த கோப்புகளில் உள்ள விவரங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸின் தம்பியான ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் விண்ட்சருக்கும் எப்ஸ்டீனுக்கும் தொடர்பு இருப்பதாக ஊடகங்களில் தொடர்ந்து தகவல் வெளியானது.

அரச மாளிகையில் இளம் பெண் ஒருவருடன் ஆண்ட்ரூ ஆபாசமாக நடந்து கொள்ளும் படங்கள் வெளியானது. ஆண்ட்ரூவுக்காக எப்ஸ்டீனால் இங்கிலாந்துக்கு ஒரு பெண் கடத்தப்பட்டார் என்ற செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 10 வருடங்களுக்கு முன் ஆண்ட்ரூ பிரிட்டனின் வர்த்தக தூதரக இருந்தார். அப்போது, எப்ஸ்டீனிடம் அரசின் ரகசிய ஆவணங்களை ஆண்ட்ரூ வழங்கியதாக சந்தேகிப்பதாக தேம்ஸ் வேலி போலீசார் சமீபத்தில் தெரிவித்திருந்தனர்.

ஆனால்,இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த ஆண்ட்ரூ ஜெப்ரீ எப்ஸ்டீனுடன் பழகியதற்காக தான் வருந்துவதாக கூறியிருந்தார். இந்த நிலையில்,நேற்று காலை கிழக்கு பிரிட்டனின் நார்போல்க் அருகே உள்ள சேன்ரிங்ஹாம் பங்களாவில் ஆண்ட்ரூவை தேம்ஸ் வேலி போலீசார் கைது செய்தனர். பாலியல் குற்றவாளி எப்ஸ்டீன் தொடர்பான பல கோடி ஆவணங்களின் அடிப்படையில், ஆண்ட்ரூ மீது 2 முக்கியக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதில் புதிய ஆதாரங்கள் எழுந்துள்ளதால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

* மன்னர் சார்லஸ் கருத்து
மன்னர் சார்லஸ் கூறுகையில், ‘ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் பற்றிய செய்திகளையும், பொது அலுவலகத்தில் தவறான நடத்தை பற்றியும் நான் மிகுந்த கவலையுடன் அறிந்தேன். இது பொருத்தமான முறையில் மற்றும் அதிகாரிகளால் விசாரிக்கப்படுகிறது. சட்டம் தன் கடமையை செய்கிறது என கூற விரும்புகிறேன்’ என்றார்.

* அரச குடும்பத்தின் மிக பெரிய தலைவலி
* இரண்டாம் எலிசபெத் ராணியின் 2வது மகனான ஆண்ட்ரூ கடந்த 1960, பிப்ரவரி 19ம் தேதி பிறந்தார்.
* இவரது அண்ணன் பிரிட்டனின் தற்போதைய அரசர் மூன்றாம் சார்லஸ்.
* ஹெலிகாப்டர் பைலட் ஆன ஆண்ட்ரூ பிரிட்டன் கடற்படையில் பணியாற்றினார். 1982ம் ஆண்டு பாக்லாந்து போரிலும் ஆண்ட்ரூ பங்கேற்றார்.
* 22 ஆண்டுகள் கடற்படையில் பணிபுரிந்த ஆண்ட்ரூ 2001ம் ஆண்டு பிரிட்டனின் சர்வதேச வர்த்தகம் மற்றும் முதலீட்டு துறையின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார்.
* இந்த பதவியில் இருந்த போது தான் எப்ஸ்டீனுடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதில் பல ரகசிய அரசாங்க தகவல்களை அவர் எப்ஸ்டீனுக்கு கொடுத்ததாக குற்றம் சாட்டப்படுகிறது.
* எலிசபெத் ராணியின் செல்லப்பிள்ளையாக இருந்த ஆண்ட்ரூ தற்போது பிரிட்டன் அரச குடும்பத்திற்கு மிக பெரிய தலைவலியாக மாறியுள்ளார்.

* ஆண்ட்ரூவின் இளவரசர் பட்டம் பறிப்பு
ஜெப்ரீ எப்ஸ்டீனின் ஆவணங்களில் சம்மந்தப்பட்டவர்களில் முக்கியமானவரான ஆண்ட்ரூவின் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது பிரிட்டன் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கடும் விமர்சனங்கள் எழுந்தது. ஆண்ட்ரூ யார்க் நகரின் அரச குடும்பத்து பிரபுவாகவும் இருந்தார். தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்ததால் கடந்த ஆண்டு மன்னர் சார்லஸ் தனது தம்பி ஆண்ட்ரூவின் அனைத்து அரச பட்டங்களையும் பறிக்க உத்தரவிட்டார். மேலும் விண்ட்சர் அரண்மனையிலிருந்தும் அவரை வெளியேற உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

* பிறந்த நாளில் கைது
ஆண்ட்ரூ விவகாரத்தில் மன்னர் சார்லஸ் மற்றும் இளவரசர் வில்லியம் ஆகியோர் கடும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதில் போலீஸ் விசாரணைக்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் வழங்கத் தயார் என பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்திருந்தது. ஆண்ட்ரூவுக்கு நேற்று 66வது பிறந்தநாள் ஆகும். பிறந்த நாள் கொண்டாடும் போது அவர் கைது செய்யப்பட்டுள்ளது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் அல்ல
பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரிடம் ஆண்ட்ரூ மவுண்ட் பேட்டன் விண்ட்சரை பற்றி கேட்ட போது,யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல, இந்த கொள்கை மிக முக்கியமானது. வேறு எந்த ஒரு வழக்கிலும் பயன்படுத்தப்படுவதை போலவே இந்த வழக்கிலும் பயன்படுத்த வேண்டும். எப்ஸ்டீன் தொடர்பாக யார் ஒருவர் தகவல் வைத்திருந்தாலும் உடனே சம்மந்தப்பட்ட துறையிடம் சாட்சியம் அளிக்க வேண்டும் என்றார்.

Related Stories: