தெஹ்ரான்: இந்த வார இறுதியில் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக வந்த தகவலையடுத்து மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. மேலும் ஈரான்-ரஷ்யா கூட்டு கடற்படை பயிற்சியும் நடத்த உள்ளதால் இந்த தாக்குதல் நடத்தப்படுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. அமெரிக்காவும், ஈரானும் ஒரு காலத்தில் நட்பு நாடுகளாக இருந்த நிலையில் தற்போது எதிரெதிர் துருவங்களாக இருந்து வருகிறது. அதே வேளையில் ஈரானும், ரஷ்யாவும் நல்ல நட்பு நாடுகளாக உள்ளன. அதனால் தான் அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் ஈரானை மிரட்டும்போதெல்லாம் ரஷ்யா தலையிடுகிறது. மேலும் ஈரானின் அணுசக்தி திட்டங்களுக்கு ரஷ்யா உதவி வருகிறது. அதனால்தான் ஈரான் அணு ஆயுதம் தயாரிக்க முயன்று வருகிறது என்று அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன. அதுமட்டுமின்றி கடந்தாண்டு ஈரான் அணுஆயுதம் தயாரிக்கும் வகையில் யுரேனியத்தை செறிவூட்டியதாக கூறப்படும் 3 அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. தற்போது மீண்டும் இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் அதிகரிக்க தொடங்கி உள்ளது.
அதாவது, ‘ஈரான் அணுஆயுதம் தயாரிக்க மாட்டோம்’ என்று அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் என்று டிரம்ப் அழுத்தம் கொடுத்து வருகிறார். இதுதொடர்பாக இருநாடுகள் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. நேற்று ஜெனீவாவில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இந்நிலையில்தான் அமெரிக்காவுடன் ஈரான் ஒப்பந்தம் செய்யாவிட்டால் பேரழிவை சந்திக்க நேரிடும்’ என்று டிரம்ப் மிரட்டியுள்ளார். அதுமட்டுமின்றி மத்திய கிழக்கில் ஈரானை ஒட்டிய பகுதிகளில் அமெரிக்கா, தனது படைபலத்தை பலப்படுத்தி உள்ளது. போர்க்கப்பல், போர் விமானங்களை குவித்துள்ளது. அமெரிக்கா படை வீரர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் உரிய முறையில் ஈரானும் பதிலடி கொடுக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. இப்படியான சூழலில்தான் ஈரானும், ரஷ்யாவும் ஓமன் கடற்பகுதியில் நாளை முதல் கூட்டு கடற்படை பயிற்சிகளை மேற்கொள்ள உள்ளன. இதுதொடர்பாக ஈரானின் கடற்படை உயர் அதிகாரிகளில் ஒருவரான ஹசன் மக்சூட்லூ கூறுகையில், ஈரான் இஸ்லாமிய குடியரசும், ரஷ்யாவும் ஒன்றிணைந்த கடற்படை பயிற்சியை ஓமன் கடல் மற்றும் வடக்கு இந்திய பெருங்கடலில் மேற்கொள்ள உள்ளது.
இருநாடுகள் இடையேயான கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கத்தில் இது மேற்கொள்ளப்பட உள்ளது’ என்றார். இந்த பயிற்சி எத்தனை நாட்கள் நடக்கும்? என்பதை அவர் கூறவில்லை. மேலும் அமெரிக்காவின் போர்க்கப்பலுக்கு சவால் விடுக்கும் வகையில் ஈரான் பாதுகாப்பு படையினர் நேற்று முன்தினம் ஹோர்முஸ் ஜலசந்தியில் பயிற்சியை மேற்கொண்டனர். அங்குதான் அமெரிக்காவின் போர்க்கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது. இப்போது ஈரான், ரஷ்யாவுடன் கைகோர்த்து பயிற்சியை தொடங்குவதால் அது டிரம்புக்கு பெரும் தலைவலியாக மாறி உள்ளதோடு மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. இந்நிலையில், இந்த வார இறுதியில் ராணுவ தாக்குதலுக்கு தயாராக இருப்பதாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதுதான் சிறந்ததாக இருக்கும் என்பதில் டிரம்ப் இன்னும் உறுதியாக இல்லை. அமெரிக்க தலைமை தளபதி தனிப்பட்ட முறையில் ராணுவ நடவடிக்கைக்கு ஆதரவாகவும் எதிராகவும் வாதிட்டதாகவும், சிறந்த நடவடிக்கை குறித்து ஆலோசகர்கள் மற்றும் கூட்டாளிகளிடம் ஆலோசனை நடத்தியதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
