தெஹ்ரான்: இந்த வார இறுதியில் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக வந்த தகவலையடுத்து மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. ஈரான் அணு ஆயுதம் தயாரிக்க முயன்று வருகிறது என்று அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன. அதுமட்டுமின்றி கடந்தாண்டு ஈரான் அணுஆயுதம் தயாரிக்கும் வகையில் யுரேனியத்தை செறிவூட்டியதாக கூறப்படும் 3 அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா குண்டு வீசி தாக்குதல் நடத்தியது.
தற்போது மீண்டும் இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. அதாவது, ‘ஈரான் அணுஆயுதம் தயாரிக்க மாட்டோம்’ என்று அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் என்று டிரம்ப் அழுத்தம் கொடுத்து வருகிறார். இதுதொடர்பாக இருநாடுகள் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஜெனீவாவில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இந்நிலையில்தான் அமெரிக்காவுடன் ஈரான் ஒப்பந்தம் செய்யாவிட்டால் பேரழிவை சந்திக்க நேரிடும்’ என்று டிரம்ப் மிரட்டியுள்ளார்.
அதுமட்டுமின்றி மத்திய கிழக்கில் ஈரானை ஒட்டிய பகுதிகளில் அமெரிக்கா, தனது படைபலத்தை பலப்படுத்தி உள்ளது. போர்க்கப்பல், போர் விமானங்களை குவித்துள்ளது. அமெரிக்கா படை வீரர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. குறிப்பாக எப் 35, எப் 22 ரக அதிநவீன போர் விமானங்களையும், கப்பல்களை நிறுத்தி வைத்துள்ளது. இந்நிலையில், அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் உரிய முறையில் ஈரானும் பதிலடி கொடுக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. இப்படியான சூழலில்தான் ஈரானும், ரஷ்யாவும் ஓமன் கடற்பகுதியில் முதல் கூட்டு கடற்படை பயிற்சிகளை மேற்கொள்கின்றன.
இதுதொடர்பாக ஈரானின் கடற்படை உயர் அதிகாரிகளில் ஒருவரான ஹசன் மக்சூட்லூ கூறுகையில், ‛ஈரான் இஸ்லாமிய குடியரசும், ரஷ்யாவும் ஒன்றிணைந்த கடற்படை பயிற்சியை ஓமன் கடல் மற்றும் வடக்கு இந்திய பெருங்கடலில் மேற்கொள்ள உள்ளது. இருநாடுகள் இடையேயான கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கத்தில் இது மேற்கொள்ளப்பட உள்ளது’ என்றார். இந்த பயிற்சி எத்தனை நாட்கள் நடக்கும்? என்பதை அவர் கூறவில்லை. மேலும் அமெரிக்காவின் போர்க்கப்பலுக்கு சவால் விடுக்கும் வகையில் ஈரான் பாதுகாப்பு படையினர் நேற்று முன்தினம் ஹோர்முஸ் ஜலசந்தியில் பயிற்சியை மேற்கொண்டனர்.
அங்குதான் அமெரிக்காவின் போர்க்கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது. இப்போது ஈரான், ரஷ்யாவுடன் கைகோர்த்து பயிற்சியை தொடங்குவதால் அது டிரம்புக்கு பெரும் தலைவலியாக மாறி உள்ளதோடு மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. இருப்பினும் இந்த வார இறுதியில் ஈரான் மீது ராணுவ தாக்குதலுக்கு தயாராக இருப்பதாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் மிகப்பெரிய அளவில் விரிவடையும் ஆபத்து ஏற்பட்டுள்ளதால், அமெரிக்கா அதற்கான ராணுவ பலத்தை குவிக்கத்தொடங்கி உள்ளது.
* அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் விருப்பங்கள் என்ன?
1. டிரம்ப் ஈரான் மீது தாக்குதல் நடத்த உத்தரவிடுவாரா என்பது இன்னும் நிச்சயமற்றதாகவே உள்ளது, அவர் அவ்வாறு செய்தால், இந்த தாக்குதல்களின் நோக்கம் என்னவாக இருக்கும் என்பது தெரியவில்லை. மத்திய கிழக்கு நாட்டுடனான பதட்டங்களுக்கு மத்தியில் ஈரானின் அணுசக்தி திட்டம், ஏவுகணைப் படை மற்றும் காமெனி தலைமையிலான ஆட்சிக்கு எதிராக டிரம்ப் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
2. இந்த தாக்குதல் நடந்தால் ஏராளமான ஈரானிய அரசியல் மற்றும் ராணுவத் தலைவர்களைக் கொல்லவும், ஆட்சியைக் கவிழ்ப்பதை நோக்கமாகக் கொண்ட பிரச்சாரமும் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. அணு மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை வசதிகள் உள்ளிட்ட இலக்குகளைத் தாக்குவதற்கு மட்டுப்படுத்தப்பட்ட ஒரு வான்வழித் தாக்குதலும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு விருப்பங்களும் வாரக்கணக்கான நடவடிக்கையாக இருக்கும்.
4. இந்த வாரம் ஜெனீவாவில் அமெரிக்கா மற்றும் ஈரானின் பிரதிநிதிகள் சந்தித்தபோதும், ஈரானுக்கு எதிராக தாக்குதல்களை உத்தரவிடலாமா வேண்டாமா என்பது குறித்து டிரம்ப் இன்னும் முடிவு செய்யவில்லை என்று அமெரிக்க அதிகாரிகள் கூறினர்.
* பணவீக்கத்தால் தொடர்ந்து ஈரானில் அரசுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்ததைத் தொடர்ந்து ஆயத்துல்லா அலி கமேனி தலைமையிலான ஆட்சிக்கு எதிராக அமெரிக்கா களம் இறங்கி உள்ளது.
* ஈரானின் அணுசக்தித் திட்டத்தை நிறுத்த அமெரிக்கா முயற்சிக்கும் நிலையில், இப்போது கவனம் ஈரானின் அணுசக்தி இருப்பு மீது திரும்பியுள்ளது.
* 2003 ஆம் ஆண்டு ஈராக் படையெடுப்பிற்குப் பிறகு, அமெரிக்கா தனது விமான சக்தியை சமீபத்தில் குவிப்பது இப்பகுதியில் மிகப்பெரியது என்று வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது.
* அமெரிக்காவின் விமானம் தாங்கி கப்பலான கேரியர் யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன், ஜெரால்ட் ஆர். போர்டு ஆகியவை ஈரானின் கடற்கரை எல்லைக்குள் நிறுத்தப்பட்டுள்ளன.
