விருதுநகர், பிப்.19: காரியாபட்டி அருகே, சொட்டுநீர் பாசனம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டத்திற்குட்பட்ட பிசிண்டி கிராமத்தில், மதுரை வேளாண் கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள் தங்கி களப்பணியாற்றி வருகின்றன். இந்நிலையில் வேளாண் கல்லூரி மாணவி உபாஷிகா, சொட்டுநீர் பாசன முறை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சியளித்தார்.
இதில், நீர் வளத்தைச் சேமிக்கும் சொட்டுநீர் பாசன முறையின் முக்கியத்துவம், அதன் செயல்முறை மற்றும் பயிர்களுக்கு ஏற்ற வகையில் டிரிப் அமைப்பை நிறுவும் முறை குறித்து விளக்கமளிக்கப்பட்டது. மேலும், குறைந்த நீரில் அதிக விளைச்சல் பெறும் வழிமுறைகள், உரத்தை நீருடன் சேர்த்து வழங்கும் தொழில்நுட்பம் மற்றும் பராமரிப்பு முறை குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
அத்துடன், டிரிப் பாசனம் அமைப்பதற்கான செலவுக் கணக்கீடு, அரசு வழங்கும் மானியத் திட்டங்கள் மற்றும் அவற்றைப் பெறும் நடைமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
