திருவள்ளூர், பிப்.16: கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் பயனாளிகளுக்கு வீடுகள் வழங்குவது தொடர்பாக கலெக்டர் பயனாளிகளை நேரில் சந்தித்து விபரங்களை கேட்டறிந்தார். தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைப்படி கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2025-26ம் ஆண்டிற்கு திருவள்ளூர் மாவட்டத்தில் கூடுதலாக 5,100 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒதுக்கீடு மற்றும் திட்ட செயலாக்கத்தின்படி ஊராட்சி அளவிலான குழுவின் மூலம் தகுதி வாய்ந்த பயனாளிகளை தேர்வு செய்து, தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள் பெயர் பட்டியலை ஒப்புதல் பெறும் பொருட்டு திருவள்ளூர் மாவட்ட அனைத்து ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட சம்மந்தப்பட்ட கிராம ஊராட்சிகளில் வரும் 17ம் தேதி சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறவுள்ளது.
இதன் தொடர்ச்சியாக மாவட்ட கலெக்டர் மு.பிரதாப் பூண்டி ஊராட்சி ஒன்றியம், பூண்டி ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் வீடுகளை பயனாளிகளுக்கு வழங்குவது தொடர்பாக பயனாளிகளை நேரில் சந்தித்து விபரங்களை கேட்டறிந்தர். பின்னர் எல்லாபுரம் ஊராட்சி ஒன்றியம், செஞ்சியகரம் ஊராட்சி ஒடக்கண்டிகை இருளர் குடியிருப்பு, லச்சிவாக்கம் ஊராட்சி ஆகிய பகுதிகளில் மாவட்ட கலெக்டர் பயனாளிகளை நேரில் சந்தித்தார்.
இறுதியாக திருவள்ளுர் ஊராட்சி ஒன்றியம், கரிக்கலவாக்கம் ஊராட்சி, கீழானூர் ஊராட்சி, தலக்காஞ்சேரி ஊராட்சி ஆகிய பகுதிகளில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் வீடுகளை பயனாளிகளுக்கு வழங்குவது தொடர்பாக மாவட்ட கலெக்டர் பயனாளிகளை நேரில் சந்தித்து விபரங்களை கேட்டறிந்தர். இந்த ஆய்வுகளின்போது ஊராட்சிகளின் உதவி இயக்குநர் (திருவள்ளுர் கிழக்கு) சு.பஞ்சு, ஊரக வளர்ச்சி உதவி செயற்பொறியாளர் கோவேந்தன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எல்லாபுரம் (வ.ஊ) மணிசேகர், திருவள்ளுர் (வ.ஊ) பி.செல்வகுமார், (கி.ஊ) ஜானகி, பூண்டி(வ.ஊ) சுலச்சனா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
