விருத்தாசலம்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த பெண்ணாடம் அருகே உள்ள சவுந்தரசோழபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பிச்சமுத்து(49). இவர் தூய்மை பணியாளர். நேற்று ஊராட்சிக்கு சொந்தமான 3 சக்கர பேட்டரி வாகனத்தை எடுத்துக்கொண்டு குப்பை சேகரிக்க சென்றார். அப்போது அதே பகுதியில் உள்ள ராஜேஷ் என்பவர் வீட்டின் முன் சாவியுடன் இயங்கிய நிலையிலே பேட்டரி வாகனத்தை நிறுத்திவிட்டு குப்பைகளை சேகரித்துள்ளார்.
திடீரென ராஜேஷின் மகள் மித்ரா(5) ஏறி பேட்டரி வாகனத்தில் உட்கார்ந்து கொண்டு இயக்கியபோது தாறுமாறாக ஓடி அருகில் உள்ள ஒரு வீட்டின் காம்பவுண்ட் சுவரில் மோதியது. வாகனத்தின் முன்பக்க கண்ணாடிகள் உடைந்து சிறுமி மித்ராவின் கழுத்து, முகம் ஆகிய இடங்களில் படுகாயம் ஏற்பட்டது. சிறுமியை பெரம்பலூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கின்றனர்.
