பிரயாக்ராஜ்: உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் ஆண்டுதோறும் மகா மேளா நடத்தப்படுகிறது. இதையொட்டி, கங்கை நதியிலும், திரிவேணி சங்கமத்திலும் ஏராளமானோர் புனித நீராடுவது வழக்கம். அதன்படி கடந்த ஜனவரி மாதம் 3ம் தேதி பவுர்ணமி தினத்தில் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடும் நிகழ்ச்சி தொடங்கியது. இது மகா சிவராத்திரி தினமான நேற்றுடன் நிறைவடைந்தது. இந்நிலையில் கடைசி நாளான நேற்று 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடினர்.
இதுகுறித்து பிரயாக்ராஜ் மாவட்ட ஆட்சியர் மணீஷ் குமார் வர்மா கூறுகையில், “நடப்பாண்டு மகா மேளாவில் 22 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் கங்கை மற்றும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர். கடந்த ஜனவரி 18ம் தேதி மவுனி அமாவாசை தினத்தில் அதிகபட்சமாக 4.36 கோடி பேர் புனித நீராடினர். மகா மேளாவின் கடைசி நாளான நேற்று 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடினர். மகா மேளாவையொட்டி மாவட்ட நிர்வாகம் சிறந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது” என்றார்.
