சோழிங்கநல்லூர் எல்காட் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் ரூ.84.42 கோடி செலவில் புதிய தகவல் தொழில்நுட்பக் கட்டிடம்

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 13ம் தேதி அன்று தலைமைச் செயலகத்தில், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தால் சென்னை சோழிங்கநல்லூர் எல்காட் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் 84.42 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள எல்காட் தகவல் தொழில்நுட்பக் கட்டடத்தை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

தமிழ்நாடு மின்னணு நிறுவனம் (எல்காட்), தமிழ்நாடு முழுவதும் உலகத்தரம் வாய்ந்த புதிய தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களை உருவாக்குதல், தகவல் தொழில்நுட்பத் துறை வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறது. சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம், திருநெல்வேலி மற்றும் ஓசூர் ஆகிய நகரங்களில் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை எல்காட் நிறுவியுள்ளது.

சென்னை, சோழிங்கநல்லூர் சிறப்பு பொருளாதார மண்டலத்தில்2.33 லட்சம் சதுர அடி பரப்பளவில் 84.42 கோடி ரூபாய் செலவில் தரை மற்றும் பத்து தளங்களுடன், சிறிய, நடுத்தர மற்றும் பெரிய நிறுவனங்களுக்கு ஏற்ற வகையில் கட்டப்பட்டுள்ள எல்காட் தகவல் தொழில்நுட்பக் கட்டி டத்தை முதல்வர் திறந்து வைத்தார். இந்த தகவல் தொழில்நுட்ப கட்டடத்தின் மூலம் சுமார் 3,000 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

இப்புதிய தகவல் தொழில்நுட்பக் கட்டிடம், ஒருங்கிணைந்த கட்டிட மேலாண்மை அமைப்பு, 24X7 பாதுகாப்பு வசதிகள், பசுமை மின் சக்தி பயன்பாடு, நீர் மேலாண்மை கடடமைப்பு என பல வசதிகளுடன் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பயன்பாட்டுக்கு ஏற்றவாறு அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர் முருகானந்தம், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை முதன்மைச் செயலாளர் பிரஜேந்திர நவ்நீத், தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மருத்துவர் கார்த்திகேயன் நிர்வாக இயக்குநர் தீபனாவிஸ்வேஸ்வரி ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related Stories: