சென்னை: நடிகரும் தவெக தலைவருமான விஜய் மற்றும் நடிகை திரிஷா ஆகியோரை இணைத்து அவதூறாக பேசிய பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை காவல் ஆணையரிடம் தவெகவினர் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 13-ம் தேதி சென்னை விமான நிலைய நுழைவாயிலில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜ மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தவெக தலைவர் விஜய் பற்றி மிகவும் இழிவான மற்றும் தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
அதாவது, வீட்டை விட்டு வெளியே வர வேண்டும், குடும்பஸ்தனாக கட்சி நடத்த வேண்டும், என ஒரு கட்சியின் தலைவரைப் பார்த்து நாகரிகமற்ற முறையில் தனிநபர் விமர்சனம் செய்துள்ளார். குறிப்பாக, நடிகை திரிஷாவின் பெயரைத் தேவையின்றி இழுத்து, திரிஷாவிடமிருந்து வெளியே வா, என்று பேசியிருப்பது ஒரு பெண்ணின் மாண்புக்கும், கண்ணியத்துக்கும் மிகப்பெரிய களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாநாட்டுக்கும், நடிகை திரிஷாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லாத நிலையில், ஏதோ நேரில் பார்த்தது போல அருவருக்கத்தக்க மற்றும் ஜீரணிக்க முடியாத கருத்துகளைப் பொதுவெளியில் பேசி, இரு தரப்பு ஆதரவாளர்களிடையே மோதலையும், பெரும் கலவரத்தையும் தூண்டும் வகையில் நயினார் நாகேந்திரன் செயல்பட்டுள்ளார். சமூக நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் வகையிலும், அவதூறு பரப்பும் நோக்கிலும் பேசிய நயினார் நாகேந்திரன் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து, சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
