ஒன்லி நைட் மீட்டிங்; கொக்கி போடும் பாஜ நழுவும் ராமதாஸ்: கூட்டணிக்காக மீண்டும் மீண்டும் தைலாபுரத்துக்கு சென்று கெஞ்சல்

பாமக கட்சி மற்றும் சின்னம் அன்புமணிக்கு சாதகமாக இருப்பதால், புதுக்கட்சி தொடங்கும் வேலையில் தீவிரமாக இறங்கி உள்ளார் ராமதாஸ். என்ன தான் அன்புமணியை தனது கட்டுப்பாட்டில் பாஜ வைத்திருந்தாலும் வன்னியர் சங்கமே பெரும் ஓட்டு வங்கி என்பதை தற்போது பாஜ உற்று நோக்குகிறது. கட்சியை உரிமை கொண்டாடும் அன்புமணியால் வன்னியர் சங்கத்தை எதுவும் செய்ய முடியவில்லை. இதனால் ராமதாசையும் தங்கள் பக்கம் இழுக்க பாஜ பல வழிகளில் முயற்சித்து வருகிறது. ஆனால், ராமதாஸ் பிடி கொடுக்காமல் இருந்து வருகிறார்.

கடந்த மாதம் முக்கிய டெல்லி தலைவர் ஒருவர் லோக்கல் பாஜ நிர்வாகி ஏ.ஜி.சம்பத் மூலம் ராமதாசை சந்தித்து பேசினார். ஆனால் ராமதாஸ் திமுகவுடன் செல்ல திட்டமிட்டார். அவரது மகள் ஸ்ரீகாந்தி மற்றும் சில நிர்வாகிகள் தவெக உடன் சேர்ந்து விடலாம் என்று கூறினர். இதனால் குழப்பத்தில் இருந்த ராமதாஸ், இப்போ போயிட்டு தை முடிஞ்சு வாங்க என்று கூறி பாஜ தூதரை அனுப்பிவிட்டார். ஆனால் ராமதாசை சேர்த்தால் பட்டியலின மக்கள் ஓட்டு விகிதம் சரியும் என விஜய்யிடம் ஆதவ் அர்ஜுனா தெரிவித்ததால் விஜய் ராமதாசை கண்டு கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

அதே நேரத்தில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அன்புமணி தரப்பு இணைந்துள்ளதால், ராமதாஸ் தரப்பு இணைந்தால், அவர்களுக்கு தனியாக எப்படி இடங்களை ஒதுக்க முடியும் என அதிமுக தலைமை யோசித்து வருகின்றதாம். ஆனால், வன்னியர் சங்கங்களின் ஓட்டு வேண்டும் என்பதால் பாஜ, தொடர்ந்து ராமதாசிடம் தூது விட்டு வருகிறது.

எப்படியாவது ராமதாசை தன் பக்கம் இழுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ள பாஜ தலைமை, நிர்வாகி ஒருவரை நேற்று முன்தினம் தைலாபுரம் தோட்டத்திற்கு அனுப்பி ராமதாசை சந்தித்து பேச்சு நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் போது, நீங்கள் கேட்கும் தொகுதிகளை விட கூடுதல் தொகுதிகள் தருகிறோம். நீங்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வரவேண்டும் என பாஜ நிர்வாகிகள் கூறியதாக தெரிகிறது.

அப்போதும், ராமதாஸ் பிடி கொடுக்காமல் எல்லாம் கேட்டுவிட்டு சரி சொல்றேன் என கூறிவிட்டு அனுப்பி உள்ளார்.  பெரும்பாலும் இரவு நேரங்களையே ராமதாசை சந்திக்க பாஜ தேர்வு செய்துள்ளது. பாஜவுக்கு ராமதாஸ் ஓகே சொல்லாததற்கு முக்கிய காரணமே அவர் திமுகவுடன் கூட்டணி வைக்கவே விரும்புவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. திமுக தலைமை திருமாவளவனிடம் பேச்சு வார்த்தை நடத்தி கூட்டணியை உறுதிப்படுத்தும் என்ற எதிர்பார்ப்பில் ராமதாஸ் உள்ளார்.

Related Stories: