* சமூக வலைத்தளங்களில் வைரலானதால் பரபரப்பு, வீடியோ பதிவு செய்த நபர்களை தேடும் போலீசார்
சென்னை: சென்னை அசோக் நகரில் 17 ஆண்டுகளுக்கு முன்பு நகை மற்றும் பணத்திற்காக ஓய்வு பெற்ற அரசு அதிகாரி உட்பட 3 பேர் கொலை செய்யப்பட்ட பங்களா வீடு தற்போது சிபிஐ விசாரணையின் கீழ் உள்ளது. இந்த வீட்டிற்குள் வாலிபர்கள் சிலர் நள்ளிரவில் அத்துமீறி உள்ள நுழைந்து ‘பேய் வீடு’ என்ற தலைப்பில் 3 ரீல்ஸ் வீடியோக்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். இதனால் கொலைக்கான தடயங்கள் அழிந்து சிபிஐ விசாரணை பாதிக்கப்படலாம் என்று அச்சம் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக அளித்த புகாரின் படி ரீல்ஸ் வீடியோ எடுத்த வாலிபர்கள் குறித்து சைபர் க்ரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை அசோக் நகர் கண்ணப்பர் சாலையில் வசித்து வந்தவர் தமிழக கனிமவளத்துறையில் நிர்வாக இயக்குநராக பணியாற்றி ஓய்வு பெற்ற சரவணன்(எ) டாமின் சரவணன். இவர் தனது மனைவி கஸ்தூரி உடன் பங்களா வீட்டில் வசித்து வந்தார். குழந்தைகள் இல்லை. தனியாக வசித்து வந்தனர். உடன் வேலைக்கார பெண் அன்பரசி என்பவர் இவர்களுடன் தங்கியிருந்தார்.
சரவணன், முன்னாள் முதல்வர் எம்ஜிஆருடன் மிகவும் நெருக்கமாக இருந்தார். ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடுடையவர். கடந்த 2008ம் அண்டு நவம்பர் 20ம் தேதி சரவணன், அவரது மனைவி கஸ்தூரி, வேலைக்கார பெண் அன்பரசி ஆகியோர் மர்மமான முறையில் கொடூரமாக கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர். வீட்டில் இருந்த தங்க, வைர நகைகள், பல லட்சம் பணம், அமெரிக்கா டாலர்கள் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த 3 கொலை தொடர்பாக அசோக் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
ஆனால் குற்றவாளிகள் குறித்து எந்த துப்பும் கிடைக்கவில்லை. இதையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. பின்னர் நடத்திய விசாரணையில், தனியாக வசித்து வரும் சரவணனிடம் அதிகளவில் செல்வங்கள் இருப்பதை அறிந்து வேளச்சேரியை சேர்ந்த முகமது யாசிம், அசோக் நகரை சேர்ந்த உதயகுமார், போரூரை சேர்ந்த மோகன்தாஸ், அவரது மனைவி சத்திய பாமா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த விரைவு நீதிமன்றம் குற்றவாளி 4 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து குற்றவாளிகள் 4 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு ெசய்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் கீழ் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்துவிட்டு, மறு விசாரணை நடத்த சிபிஐக்கு உத்தரவிட்டது. அதைதொடர்ந்து இந்த 3 பேர் கொலை வழக்கை தற்போது சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இதனால் கொலை நடந்து 17 ஆண்டுகள் ஆகியும் அந்த வீட்டிற்குள் பொதுமக்கள் யாரையும் அனுமதிக்கப்படவில்லை.
வழக்கு விசாரணை பாதிக்கப்படும் என்பதால் கொலை நடந்த சரவணனின் பங்களா வீட்டில் உள்ள அனைத்து பொருட்களும் கடந்த 17 ஆண்டுகளாக அப்படியே தூசிகளுடன் உள்ளது. பல ஆண்டுகளாக பங்களா வீடு பூட்டப்பட்டுள்ளதால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் இந்த வீட்டில் இரவு நேரத்தில் வித்தியாசமான சத்தங்கள் வருவதாகவும், அலறும் சத்தம் கேட்பதாகவும் கூறி வருகின்றனர். மேலும், இந்த பங்களா வீட்டில் ‘பேய்’ நடமாட்டம் இருப்பதாக கூறி அப்பகுதி மக்கள் யாரும் அந்த வீட்டின் பக்கம் ஒதுங்குவது கிடையாது.
அந்த அளவுக்கு அசோக் நகர் பகுதி மக்களிடையே பேய் வீடு என்று கூறப்படும் பங்களா வீட்டிற்குள், வாலிபர்கள் சிலர் அத்துமீறி நள்ளிரவில் மதில் சுவர் ஏறி குறித்து தரைத்தளத்தில் உள்ள சரவணன் பயன்படுத்திய சொகுசு கார் முதல், ஒவ்வொரு தளத்திற்கும் சினிமா காட்சிகள் போல் வீட்டிற்குள் புகைப்படங்கள், படுக்கை அறைகள், எம்ஜிஆர் மற்றும் ஆன்மீக தலைவர்களுடன் சரவணன் இருக்கும் புகைப்பட ஆல்பங்களை எடுத்து பார்த்து அதை தங்களது செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர்.
பின்னர் அந்த வீடியோக்களை பேய்வீடு என கூறி ரீல்சாக 3 வீடியோக்களை பதிவு செய்துள்ளனர். முதல் ரீல்ஸ் வீடியோ 1.11 நிமிடங்கள் ஓடுகிறது. இரண்டாவது ரீல்ஸ் வீடியோ 59 நிமிடங்களும், மூன்றாவது வீடியோ 58 நிமிடங்களும் ஓடுகிறது. அந்த வீடியோவில் 6 வாலிபர்கள் ‘நாங்கள் பேய் வீட்டிற்கு போகிறோம்….’ என்று பாடல் ஒன்றை பின்னணியில் இசைக்கும் படி காரில் செல்கின்றனர். பிறகு காருக்கு எரிபொருள் நிரப்பி கொண்டு பேய் வீடு இருக்கும் இடத்தை கூறி கொண்டு வருகிறனர்.
அந்த வீட்டின் முன்பு 10க்கும் மேற்பட்ட வாலிபர்கள் கார் மற்றும் பைக்கில் ஒன்று கூடுகின்றனர். பிறகு வீட்டிற்குள் 6 பேர் தங்களது செல்போனில் வீடியோ எடுத்தபடி மதில் சுவர் வழியாக உள்ளே சென்று முதலில் தரைத்தளத்தில் சரவணன் பயன்படுத்திய 9090 பதிவு எண் கொண்ட காரில் இருந்து தங்களது வீடியோவை பதிவு செய்து வீடு முழுவதும் காட்டுகின்றனர். இந்த ரீல்ஸ் வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இது சர்ச்சையை தற்போது கிளப்பியுள்ளது. விசாரணைக்காக சிபிஐ அதிகாரிகள் இன்னும் கொலை நடந்த வீட்டை முழுமையாக ஆய்வு செய்யவில்லை என்று கூறப்படுகிறது. அப்படி இருக்கும் நிலையில் வாலிபர்கள் ரீல்ஸ் மோகத்தால் பல ஆண்டுகளாக வழக்கு நிலுவையில் உள்ள கொலை நடந்த பங்களா வீட்டிற்குள் அத்துமீறி உள்ளே நுழைந்து, வழக்கு தொடர்பான பல ஆவணங்களை கலைத்துவிட்டதாகவும், இவர்களால் கொலை வழக்கு பாதிக்கப்படலாம் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ரீல்ஸ் வீடியோ எடுத்த வாலிபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சைபர் க்ரைமில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ரீல்ஸ் எடுக்கப்பட்ட பங்களா வீடு அசோக் நகர் காவல் எல்லையில் உள்ளதால், அசோக் நகர் போலீசார், கொலை நடந்த ஓய்வு ெபற்ற அரசு அதிகாரி சரவணன் பங்களா வீட்டிற்கு தற்போது பாதுகாப்பு போட்டுள்ளனர்.
மேலும், அந்த வீட்டிற்கு இனி யாரேனும் வந்தால், அவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கும் வகையில் சிசிடிவி கேமராக்களையும் பொருத்தியுள்ளனர். ரீல்ஸ் வெளிட்ட நபர்கள் குறித்து சைபர் க்ரைம் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்த சம்பவம் தற்போது சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
