குறைபாடுகளுடன் பிறந்தாலும் பராமரிப்பது கடமை; விஷம் கொடுத்து குழந்தையை கொன்ற பெற்றோருக்கு ஆயுள் தண்டனை சரியே; ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு

மதுரை: மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தையை விஷம் கொடுத்து கொன்ற பெற்றோருக்கு கீழமை நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது சரியே என ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்த மல்லி பகுதியை சேர்ந்தவர் முனீஸ்வரன். இவரது மனைவி ரேவதி. இவர் கல்லூரி பேராசிரியை. இவர்களுக்கு சாதனா என்ற பெண் குழந்தை இருந்தது. அக்குழந்தை பிறக்கும்போதே மனநல குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்தது. குழந்தையை கவனித்துக்கொள்ள வசதியாக ரேவதி தனது பணியை ராஜினாமா செய்தார். எனினும், குழந்தை தொடர் பராமரிப்பு, மன உளைச்சல் காரணமாக கடந்த 2018ம் ஆண்டு குளிர்பானத்தில் விஷம் கலந்து தங்களது குழந்தைக்கு கொடுத்தனர். மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை 6.10.2018 அன்று உயிரிழந்தது.

இதுகுறித்து விஏஓ கொடுத்த புகாரின்படி, மல்லி போலீசார் வழக்குபதிவு செய்தனர். வழக்கை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்றம் குழந்தையின் பெற்றோர் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து இருவரும் ஐகோர்ட் மதுரை கிளையில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை நீதிபதிகள் ஜி.கே.இளந்திரையன், ஆர்.பூர்ணிமா ஆகியோர் விசாரித்து பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கில் பல சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறியுள்ளனர். இருப்பினும் விஷம் கொடுக்கப்பட்டதால் தான் குழந்தை இறந்தது என்பது மருத்துவ ஆதாரம் மூலம் தெரியவருகிறது.

வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட குழந்தையின் பெற்றோர் சந்தித்த சிரமங்களை நீதிமன்றம் அனுதாபத்துடன் கருத்தில் கொள்கிறது. இருப்பினும் அக்குழந்தை தானாக இந்த உலகிற்கு வரவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கே பிறந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை பெற்றோர் கொல்ல சட்டம் அனுமதித்தால் அத்தகைய குழந்தைகள் யாரும் இந்த உலகில் உயிர்வாழ முடியாது. குழந்தை மனநல பாதிப்புடன் பிறந்தாலும் உடல் ஊனத்துடன் பிறந்தாலும் அல்லது எந்தக் குறைபாடும் இன்றி பிறந்தாலும் அவர்களை பராமரிப்பது பெற்றோரின் கடமை.

சட்டத்தை யாரும் கையில் எடுத்து மற்றொருவரின் உயிரைப் பறிக்க உரிமையில்லை. இன்றும் கூட மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக பல பெற்றோர் பெரும் தியாகங்களை செய்கிறார்கள். தங்கள் உயிரையே கூட பணயம் வைக்கிறார்கள். எனவே, கொலை குற்றத்திற்காக குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு கீழமை நீதிமன்றம் தண்டனை வழங்கியது சரியே’. எனவே, மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Stories: