திருவொற்றியூர்: வெளிமாநிலத்தில் நிலக்கரி ஏற்றிக்கொண்டு சரக்கு ரயில் இன்று காலை திருவொற்றியூர் ரயில் நிலையம் வந்து, மார்சல் யார்டு பகுதிக்கு சென்றுகொண்டிருந்தது. அப்போது ஒரு ரயில் பெட்டியில் இருந்து திடீரென புகை வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த டிரைவர், ரயிலை நிறுத்திவிட்டு உடனடியாக தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து திருவொற்றியூர் தீயணைப்பு நிலைய அலுவலர் பற்குணம் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீச்சியடித்து நிலக்கரியில் இருந்து வந்த புகையை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
அதிக வெப்பம் காரணமாக நிலக்கரி சூடாகி புகை வந்திருக்கலாம் என கூறப்படுகிறது. தகவல் கிடைத்ததும் உடனடியாக தீயணைப்பு வீரர்கள் வந்து புகையை கட்டுக்குள் கொண்டு வந்ததால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் திருவொற்றியூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
