மனிதர்கள் உயிர் வாழ்வதற்கு மிகவும் முக்கியமானது உணவு. அனைத்து நிலை மக்களின் ஓட்டமும் இந்த உணவுக்காகவே பிரதானமாக உள்ளது என்றால் அதுவும் மிகையல்ல. நமது முன்னோர்கள் உணவே மருந்து என்ற வாழ்க்கை முறையை கையாண்டனர். ஆனால் இப்போது நாம் உண்ணும் உணவுகளே, நாம் மருந்துகளை நாடுவதற்கு காரணமாக அமைந்து விடுகிறது. இப்படிப்பட்ட நிலையில் பெரும்பாலான மக்களின் பார்வை ஆர்கானிக் என்னும் இயற்ைக உணவுகளின் பக்கம் திரும்பியுள்ளது. இந்த நல்லமாற்றம் என்பது வரவேற்புக்குரியது.
இது ஒருபுறமிருக்க உண்மையிலேயே நமக்கு கிடைப்பது இயற்கை உணவுகள் தானா? இயற்கை உணவு என்ற பெயரில் வணிகம் பிரதானமாகி வருகிறதா? என்ற ஐயப்பாடுகளும் மக்களிடையே எழுந்துள்ளது. ஆர்கானிக் உணவுகள் உண்மையென்றால் அதற்கு சில தகுதிகள் இருக்க வேண்டியதும் அவசியமாகிறது. இயற்கையான உணவு முறை மற்றும் இயற்கையான நுட்பங்களில் தயாராகும் உணவுகளே ஆர்கானிக் உணவுகள் எனப்படுகிறது. அப்படியென்றால் இயற்கையாக விளைவிக்கும் பொருட்களில் எந்தவிதமான பூச்சிக்கொல்லிகள், களைக்கொல்லிகள், உரங்கள் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும்.
அதேபோல் கால்நடைகளுக்கும், விலங்குகளுக்கும் எந்தவிதமான ஆன்டிபயாடிக்குகள் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். அவற்றின் வளர்ச்சிக்கான ஹார்மோன்கள் வேறெந்த துணைப்பொருட்களையும் பயன்படுத்தாமல் உருவாக வேண்டும். இந்தவகையில் 100சதவீத இயற்கை உணவுகள் நமக்கு கிடைப்பதற்கு வாய்ப்பே இல்லை. இவ்வாறு இயற்கையான முறையில் உணவுப்பொருட்களை விளைவிப்பது எளிதான காரியம் அல்ல. அப்படியே விளைவித்தாலும் இதன் விலையும் வழக்கமான உணவுப்பொருட்களில் இருந்து மிகவும் அதிகமான விலைக்கே வழங்க முடியும். இதை மக்கள் முழுமையாக உணராததால் போலி இயற்கை உணவுகளும் சந்தையில் மலிந்து வருகிறது என்கின்றனர் உணவுமேம்பாட்டு ஆர்வலர்கள்.
இதுகுறித்து உணவுப்பொருட்கள் குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டுள்ள ஊட்டச்சத்து மருத்துவ நிபுணர்கள் கூறியதாவது: ஆர்கானிக் உணவுகளுக்கும், நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளுக்கும் இடையே ஊட்டச்சத்து அளவுகளில் (புரதம், கொழுப்பு, கார்போ ஹைட்ரேட், நார்ச்சத்து) எந்தப் பெரிய வித்தியாசமும் இல்லை.
ஆனால் வேறு சில கலவை வேறுபாடுகள் நன்மையை தருவதாக உள்ளது. உதாரணமாக ஆர்கானிக் பழங்கள் மற்றும் காய்கறிகளில் அதிகப்படியான பினோலிக் கலவை (ஆன்டி அக்சிடென்ட்கள்) இடம் பெற்றுள்ளது. அதேபோல் பால்சார்ந்த பொருட்கள், இறைச்சிகளில் ஒமேகா கொழுப்பு அமிலங்கள் உள்ளது. வழக்கமான உணவுப்பொருட்களோடு ஒப்பிடுகையில் இதுவும் அதிகம் தான். அதே நேரத்தில் ஆர்கானிக் என்பது முழுமையான ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் என்பதை உறுதியாக கூற முடியாது.
ஆர்கானிக் உணவுப் பொருட்களில் சில, அதிகமாக பதப்படுத்தப்படுகிறது. இதனால் கலோரிகள் கூடுதலாக இருப்பது, சர்க்கரை, உப்பு, கொழுப்பு போன்றவை இடம் பெறுவதும் அதிகமாக உள்ளது. உதாரணமாக ஆர்கானிக் குக்கீஸ், சிப்ஸ், ஐஸ்கிரீம் போன்றவை இயற்கையாக தயார் செய்யப்படுகிறது என்று கூறப்பட்டாலும், அதில் ஊட்டச்சத்துகள் மிகக்குறைவாகவே உள்ளது.
எனவே நாம் இயற்கை உணவோ அல்லது இயல்பான உணவோ எதை சாப்பிட வேண்டும் என்பதை தெளிவாக முடிவு செய்ய வேண்டும்.
அதை தேர்வு செய்வதற்கு முன்பு உங்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள், கார்போ ஹைட்ரேட், புரதம், கொழுப்பு, நார்ச்சத்து அளவுகளையும், மைக்ேரா ஊட்டச்சத்து எனப்படும் வைட்டமின் மற்றும் தாதுக்களின் அளவையும் கணக்கிட்டு பார்க்க வேண்டும். அதன்பிறகு ஆர்கானிக் தேவையா? அல்லது வழக்கமான உணவே போதுமா? என்பதை தீர்மானித்து உண்ணவேண்டும். இதன்மூலம் போலி ஆர்கானிக் மோகம் தவிர்க்கப்படுவதோடு, குழப்பங்களுக்கும் தீர்வு கிடைக்கும். இவ்வாறு மருத்துவ நிபுணர்கள் கூறினர்.
* சிறுதானியங்கள் உடலுக்கு நல்லது
‘‘சமீபகாலமாக ஆர்கானிக் என்ற வார்த்தை வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்கும், தங்கள் தயாரிப்புகளை சந்தைப்படுத்தவும் உற்பத்தியாளர்கள் பயன்படுத்தும் ஒன்றாக மாறி வருகிறது. பண்ணைகளில் உற்பத்தி செய்யப்படுபவை நம்பகத்தன்மை மிகுந்த ஆர்கானிக் பொருட்களாக உள்ளது. ஆனால் பொதுமக்கள், பண்ணைகளை நாடிச்செல்வதில் அதிகநாட்டம் இல்லாமல் உள்ளனர்.
இதற்கு அவர்களின் வேலைப்பளுவும், அலட்சியமும் கூட ஒரு காரணம். இதனால் தான் ஆர்கானிக் பொருட்கள் என்ற பெயரில் எது கிடைத்தாலும் வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். இதற்கு பதிலாக எப்போதும் போல் இயல்பாக கிடைக்கும் சிறுதானியங்களை நாம் அதிகளவில் வாங்கி உட்கொள்வது உடலுக்கு நல்லது,’’ என்பது உணவியல் வல்லுநர்கள் வழங்கியுள்ள அறிவுரை.
* காய்கறி, பழங்கள் நல்லபலனை தரும்
சமைக்காத உணவுகளில் தான், மனிதனுக்கு தேவையான எல்லா உயிர்சத்துகளும், வைட்டமின்களும் இயற்கையாகவே அமைந்துள்ளது. அவை உணவுகளை ஜீரணிப்பதற்கும் மிகவும் உதவி செய்கின்றன. இந்த வகையில் காய்கறிகள், பழங்களை சாப்பிட்டாலும் ஒரு மணிநேரத்திற்குள் ஜீரணமாகிவிடும். ஆனால் சமைத்த உணவுகளை உண்ணும் போது ஜீரணமாவதற்கு 4மணி நேரமாகும். ஜீரணத்திற்கு உதவி செய்யும் வைட்டமின்களும், தாதுப்பொருட்களும், சமைத்த உணவுகளில் இல்லாததே இதற்கு முக்கிய காரணம். எனவே சமைத்த உணவை சாப்பிட்டு வயிற்றை நிரப்புவதை விட சத்துமிக்க பழங்கள், கேரட், வெள்ளரி போன்ற பச்சை காய்கறிகளை சாப்பிடுவதும் நல்ல பலன்தரும் என்றும் ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
* இதை பாலோ செய்யலாம்
பல்வேறு விதமான உணவு ஆதாரங்களில் இருந்து பலவகையான உணவு வகைகளை நாம் தேர்ந்தெடுத்து உண்ணலாம். இவை சிறந்த ஊட்டச்சத்து கலவையை நமது உடலுக்கு தருகிறது. அந்த பருவநிலைக்கு தகுந்த வகையில் உள்ளூரிலேயே விளையும் பழங்கள், காய்கறிகளை அதிகளவில் வாங்கி பயன்படுத்தலாம்.
அதேபோல் பழங்கள் மற்றும் காய்கறிகளை கண்டிப்பாக கழுவி பயன்படுத்த வேண்டும். தண்ணீரில் நன்றாக கழுவி பயன்படுத்தும்போது அதிலுள்ள அழுக்குகள் மட்டுமன்றி பாக்டீரியாக்கள், ரசாயனங்கள் போன்றவையும் நீங்கும். சமைத்த உணவுகளை அதிகமாக உண்பதை விட பச்சை காய்கறிகள் சாப்பிடும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம். இதுவும் நமது முன்னோர்கள் பயன்படுத்திய ஒரு பாரம்பரிய உணவு முறை தான் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.
