பிரிவினைச் சக்திகளுக்கு ஒருபோதும் இடம் கொடுக்காமல் அன்பு, பண்பு, அறன், கருணை கொண்ட சமுதாயத்தை உருவாக்க உழைப்போம்: வள்ளலார் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: நம்முடைய பண்பாட்டு அடையாளங்களுக்கு வேறு வர்ணம் பூச நினைக்கிறார்கள், வள்ளலாரின் நோக்கங்களை சிதைத்திட நாம் அனுமதிக்க கூடாது. பிரிவினைச் சக்திகளுக்கு ஒருபோதும் இடம் கொடுக்காமல், அன்பும்-பண்பும்-அறனும்-கருணையும் கொண்ட சமுதாயத்தை உருவாக்க உழைப்போம் என்று முதல்வர் கூறியுள்ளார். சென்னையில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் “அனைத்துலக வள்ளலார் மாநாடு 2026” நேற்று நடந்தது. மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

வள்ளலார் பாடுவதற்காக எடுத்துக்கொண்ட திருவாரூரைச் சேர்ந்தவன் என்ற பெருமையோடு இந்த மாநாட்டில் நான் பங்கேற்க வந்திருக்கிறேன். இன்றைக்கு அனைத்துலக வள்ளலார் மாநாட்டை நடத்திக் கொண்டிருக்கிறோம்.  வள்ளலாரை ஏன் நாம் உயர்த்திப் பிடிக்கிறோம் என்றால், “வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்” என்று சொல்லி, உலகுக்கே ‘தனிப்பெரும் கருணை’ என்ற அன்பு வழியை போதித்தவர் வள்ளலார். அவரது வழியில் தான், நமது திராவிட மாடல் அரசும், ஏழை எளிய மக்களுக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

ஏழை மக்களின் பசியை ‘பிணி’ என்று சொன்னார் வள்ளலார். அந்தப் பிணியை ஒழிக்கும் மருந்துதான் நமது திராவிட மாடலின் திட்டங்கள். அதனால்தான், பள்ளிகளில், காலை உணவுத் திட்டம் முதல் முதியோர்களுக்கான தாயுமானவர் திட்டம் வரை, அனைத்து வயதினரையும், கருணையோடு அரவணைக்கின்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

வள்ளலார் தமிழ்ச்சமூகத்தில் உதித்த புரட்சியாளர்; மாண்பாளர்! அவரைப் போற்ற வேண்டியது, தமிழ்நாட்டின் கடமை. என்னுடைய பேச்சுகளிலும், சமூக வலைத்தளப் பதிவுகளிலும் வள்ளலாரை நிறைய நான் மேற்கோள் காட்டியிருக்கிறேன். வள்ளலாரின் கோட்பாடுகளை மேற்கோள் காட்டுவது மட்டுமல்ல, அவற்றை செயல் வடிவத்தில் நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

அவற்றையெல்லாம் சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், தலைவர் கலைஞர் ஆட்சிக் காலத்தில், சென்னையில் வள்ளலார் வாழ்ந்த பகுதிக்கு, ‘வள்ளலார் நகர்’ என்று பெயர் வைத்தார். அந்த வள்ளலார் நகர் பேருந்து நிலையத்தை ரூ.10 கோடி செலவில் புனரமைத்திருக்கிறோம். கிருஷ்ணராஜ் வானவராயர் சொன்னார், நம்முடைய திராவிட மாடல் அரசு பொறுப்பேற்றதும் வள்ளலார் பிறந்தநாளை, ‘தனிப்பெருங்கருணை நாளாக’ அறிவித்தோம்.

வள்ளலாரின் 200வது பிறந்தநாள் – தருமசாலை நிறுவப்பட்ட 156வது ஆண்டு தொடக்கம்-ஜோதி தரிசனம் காட்டுவித்த 152வது ஆண்டு ஆகியவற்றை இணைத்து, 2022 அக்டோபரில் இருந்து 2023 அக்டோபர் வரை தொடர்ச்சியாக ஓராண்டு காலம் முப்பெரும் விழாக்களை கொண்டாடினோம். அதுமட்டுமல்ல, ‘வள்ளலார் 200’ என்ற பெயரில் இலச்சினை, அஞ்சல் உறை, சிறப்பு மலர் வெளியிட்டு அன்னதானம், மாணவர்களுக்கு இலக்கியப் போட்டிகள் என்று பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தினோம்.

வள்ளலார் வாழ்ந்த மருதூர் இல்லத்தை புனரமைத்தோம். தைப்பூசத்தை முன்னிட்டு, வடலூர் வள்ளலார் தெய்வ நிலையத்தில், மூன்று நாட்கள் அங்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்றைக்கு திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு “வள்ளலார் நெடுஞ்சாலை” என்று பெயர் சூட்டி திறந்து வைத்திருக்கிறோம். இந்தச் சாதனைகளின் தொடர்ச்சியாகதான், வள்ளலார் பற்றாளர்களின் கோரிக்கையின் அடிப்படையில், அவரின் உயரிய கருத்துகளை, வாழ்க்கை நெறிகளை, உலகெங்கும் போற்றிடும் நோக்கத்துடன் இன்று, அனைத்துலக வள்ளலார் மாநாடு நடத்தப்படுகிறது.

இந்த மாநாட்டிற்கு வந்துவிட்டு புதிய அறிவிப்புகளை வெளியிடாமல் சென்றால், சேகர்பாபுவுக்கும் நிம்மதி இருக்காது-எனக்கும் திருப்தி இருக்காது. அதனால், ஏழு அறிவிப்புகளை நான் வெளியிடுகிறேன். முதல் அறிவிப்பு-இந்த அனைத்துலக வள்ளலார் மாநாடு நடைபெற்றதை குறிக்கின்ற விதமாக இந்த பள்ளி வளாகத்தில், நினைவுத் தூண் அமைக்கப்படும். இரண்டாவது அறிவிப்பு-வடலூரில், சன்மார்க்க பயிற்சிப் பள்ளி ஏற்படுத்தப்படும்.

அந்தப் பள்ளியில் திருவருட்பா இசைப்பயிற்சியும் அளிக்கப்படும். மூன்றாவது அறிவிப்பு – வடலூரில், வள்ளலார் பெயரில் மூலிகைத் தோட்டம் அமைக்கப்படும். நான்காவது அறிவிப்பு-’ஸ்பிரிச்சுவல் அல்-கெமி’ என்ற வள்ளலார் புத்தகம் அறநிலையத் துறை பதிப்பகத்தின் மூலமாக வெளியிடப்படும். ஐந்தாவது அறிவிப்பு – வள்ளலார் பிறந்தநாளையொட்டி ஆண்டுதோறும் மூன்று நாட்கள் விழா நடத்தப்படும்.

ஆறாவது அறிவிப்பு – மேட்டுக்குப்பம், மருதூர், கருங்குழி ஆகிய இடங்களில், ‘வள்ளலார் அன்னதான கூடங்கள்’ திறக்கப்படும். ஏழாவது அறிவிப்பு-கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகில் அமைந்து வரும் பூங்காவுக்கு ‘வள்ளலார் பூங்கா’ என பெயர் சூட்டப்படும். உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி தானே. அதேபோல். இங்கு கிருஷ்ணராஜ் வானவராயர் சொன்ன கோரிக்கைகள் உண்டு. தலைநகர் சென்னையில், வள்ளலார் ஆய்வு மையம் அமைக்கப்படும் என்பது. அந்த ஆய்வு மையம் இந்து சமய அறநிலையத் துறையின் வளாகத்தில் அமைக்கப்படும்.

மற்ற கோரிக்கைகளும் நிச்சயம் பரிசீலிக்கப்படும். எனவே, இந்த மாநாட்டு மூலமாக, வள்ளலாரைப் பற்றி இளைய தலைமுறையினருக்கு சுருக்கமாக அறிமுகப்படுத்த வேண்டும் என்றால், அன்பின் வழியாக சமத்துவத்தை, உயிர்கள் மீதான கருணையை, தமிழ்ச் சமூகத்தின் வழியாக இந்த உலகத்துக்கு எடுத்துரைத்த பேரன்பின் வடிவம்தான் வள்ளலார். “சாதியிலே, மதங்களிலே, சமயநெறிகளிலே, சாத்திரச் சந்தடிகளிலே, கோத்திரச் சண்டையிலே, ஆதியிலே அபிமானித்து அலைகின்ற உலகீர்-அலைந்து அலைந்து வீணே நீர் அழிதல் அழகலவே” என்று சொல்லி, அறிவுநெறியை பரப்பியவர் வள்ளலார்.

இந்தச் சமூகத்தில், இறுகிப் போயிருந்த பழமைவாதங்களையும், மூடத்தனங்களையும் சாடியவர் அவர். சாதி, சமய வேறுபாடுகள் இல்லாத சமூகத்தை கட்டமைக்க வேண்டும் என்ற அவருடைய பெருங்கனவுதான் திராவிட இயக்கத்தின் உயிர் மூச்சுக் கொள்கை. அதனால்தான், திராவிட இயக்கம் உருவானதில் இருந்து, தொடர்ந்து வள்ளலாரை உயர்த்திப் பிடித்துக் கொண்டிருக்கிறோம். ஆறாம் திருமுறை பாடல்களைத் தொகுத்து, ‘இராமலிங்கர் பாடல் திரட்டு’ என்ற நூலை 1940ல் வெளியிட்டவர், தந்தை பெரியார்.

இன்னும் ஒருபடி மேலே சென்று, தமிழர்கள் முன்பு, பெரியார் ஒரு கேள்வியை முன்வைத்தார். தந்தை பெரியார் என்ன கேட்டார் தெரியுமா? “வட நாட்டு சாமியார்களை போற்றும் தமிழனே, வடலூர் வள்ளலார் எந்த விதத்தில் தாழ்ந்தவர்?” என்று கேட்டார். இதையெல்லாம் உணர்ந்துதான், “வள்ளலாரின் கொள்கைகளை சமுதாயக் களத்தில், பெரியார் பரப்புரை செய்தார்” என்று தவத்திரு குன்றக்குடி அடிகளாரே சொல்லியிருக்கிறார்.

அந்த வழியில் தான் சமத்துவத்தையும், சமூகநீதியையும் நிலை நாட்டுகின்ற நம்முடைய அரசு- எங்களுடைய கோட்பாடு “எல்லார்க்கும் எல்லாம்” என்ற அவருடைய சிந்தனையின் செயல் வடிவம் தான். இங்கே கூடியிருக்கும் அன்பர்கள் எல்லோரிடத்திலும் நான் கேட்டுக் கொள்ள விரும்புவது, வள்ளலாரைப் போற்றுவதோடு, நம்முடைய பணி நின்றுவிடக் கூடாது; அவருடைய நோக்கங்களை மக்கள் முழுமையாக உணர்ந்து, கடைப்பிடிக்க பாடுபட வேண்டும்.

அதற்கு இந்த மாநாடு வழி வகுக்கவேண்டும். ஏனென்றால், நம்முடைய பண்பாட்டு அடையாளங்களுக்கு வேறு வர்ணம் பூச நினைக்கிறார்கள், வள்ளலாரின் நோக்கங்களை சிதைத்திட நாம் அனுமதிக்க கூடாது. பிரிவினைச் சக்திகளுக்கு ஒருபோதும் இடம் கொடுக்காமல், அன்பும்-பண்பும்-அறனும்-கருணையும் கொண்ட சமுதாயத்தை உருவாக்க உழைப்போம்.

சமத்துவம் போற்றும் அன்பு வழியாம் வள்ளலார் நெறி எங்கெங்கும் பரவட்டும். என்றென்றும் நிலைக்கட்டும். அவர் ஏற்றி வைத்த ஜோதியைப் போல சுடர்விட்டும்-அணையாத அடுப்பைப் போல அனைவரின் தேவைகளை நிறைவேற்றி, இடர் போக்கும் இனிய அரசாகவும், நம்முடைய திராவிட மாடல் அரசு என்றென்றும் திகழும். இவ்வாறு அவர் பேசினார். மாநாட்டில் அமைச்சர்கள் எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பி.கே.சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, எம்எல்ஏக்கள் மோகன், தாயகம் கவி, வெற்றியழகன், ஜோசப் சாமுவேல்,

கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன், ஆணையர் ஸ்ரீதர், மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், கோவை குமரகுரு கல்வி நிறுவனங்கள் தலைவர் கிருஷ்ணராஜ் வானவராயர், வடலூர் தலைமை சமரச சுத்த சன்மார்க்க சங்க தலைவர் அருள் நாகலிங்கம், பொதுச் செயலாளர் வெற்றிவேல், வள்ளலார் சன்மார்க்க அன்பர்கள் சுவாமி பத்மேந்திரா, சண்முக மூர்த்தி, இராம பாண்டுரங்கன், செல்வ மாதரசி, அறிவழகன், செல்வகுமார், இந்து ராம், சுகி சிவம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

* அமைச்சர் பி.கே.சேகர்பாவுக்கு புகழாரம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், நம்முடைய சேகர்பாபுவை பொறுத்தவரைக்கும், கட்சி பணியாக இருந்தாலும் சரி, அரசின் சார்பிலான ஆன்மீகப் பணிகளாக இருந்தாலும் சரி, அதைச் சிறப்பாக செய்து, தான் ‘செயல்பாபு’ தான் என்று தொடர்ந்து நிரூபிக்கக்கூடியவர்.

இந்த மாநாட்டையும், ஆன்மீக அன்பர்கள் அனைவரையும் அழைத்து, அமைதியோடும், அழகோடும் ஏற்பாடு செய்து, நம்முடைய அன்பை பெற்றிருக்கிறார். சேகர்பாபு பொறுப்பேற்றதற்கு பிறகுதான், அறநிலையத் துறை இவ்வளவு சிறப்பாக, விரைவாக செயல்படமுடியுமா? என பலரும் வியப்புடன் பார்க்க தொடங்கினார்கள்” என்றார்.

* அனைத்துலக வள்ளலார் மாநாட்டில் பேசிய முதல்வர் 7 அறிவிப்புகளை வெளியிட்டார். அவை:
1. அனைத்துலக வள்ளலார் மாநாடு நடைபெற்றதை குறிக்கின்ற விதமாக இந்த பள்ளி வளாகத்தில், நினைவுத் தூண் அமைக்கப்படும்.
2. வடலூரில், சன்மார்க்க பயிற்சிப் பள்ளி ஏற்படுத்தப்படும். அந்தப் பள்ளியில் திருவருட்பா இசைப்பயிற்சியும் அளிக்கப்படும்.
3. வடலூரில், வள்ளலார் பெயரில் மூலிகைத் தோட்டம் அமைக்கப்படும்.
4. ‘ஸ்பிரிச்சுவல் அல்-கெமி’ என்ற வள்ளலார் புத்தகம் அறநிலையத் துறை பதிப்பகத்தின் மூலமாக வெளியிடப்படும்.
5. வள்ளலார் பிறந்தநாளையொட்டி ஆண்டுதோறும் மூன்று நாட்கள் விழா நடத்தப்படும்.
6. மேட்டுக்குப்பம், மருதூர், கருங்குழி ஆகிய இடங்களில், ‘வள்ளலார் அன்னதான கூடங்கள்’ திறக்கப்படும்.
7. கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகில் அமைந்து வரும் பூங்காவுக்கு ‘வள்ளலார் பூங்கா’ என பெயர் சூட்டப்படும்.

Related Stories: