தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இடைக்கால பட்ஜெட் நாளை தாக்கல்: பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு

சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள நிலையில், தமிழக சட்டசபை நாளை காலை கூடுகிறது. அப்போது இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்ய உள்ளார். இதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது. தமிழ்நாடு சட்டப் பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த மாதம் 20ம் தேதி நடந்தது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் கவர்னர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அதன்படி முதல் கூட்டத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்றார்.

அப்போது அவர் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு பிறகு தேசிய கீதம் பாடப்படவில்லை என்று குற்றம் சாட்டி அவரது உரையை புறக்கணித்து சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார். அதன் பிறகு கவர்னரின் தமிழாக்க உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். இரண்டாவது நாள் கூட்டத்தில் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. 22, 23ம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடந்தது. தொடர்ந்து ஜன.24ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் விவாதத்துக்கு பதில் அளித்து பேசினார்.

இதையடுத்து சட்டப்பேரவை மீண்டும் கூடும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். இந்நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவையின் அடுத்த கூட்ட தொடர் பிப்ரவரி 17ம் தேதி கூடும் என்று அறிவித்தார். அதன்படி தமிழக சட்டப்பேரவை நாளை(செவ்வாய்கிழமை) காலை 9.30 மணிக்கு கூடுகிறது. தொடர்ந்து 2026-27ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்ய உள்ளார். இதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது.

ஏனென்றால் தமிழ சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் தேதி இம்மாதம் இறுதியில் அல்லது, அடுத்த மாதம் முதல் வாரத்தில் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவியுள்ளது. அது மட்டுமல்லாமல் இந்த சட்டப் பேரவையின் கடைசி கூட்ட தொடர் இதுவாகும். இதனால், இடைக்கால பட்ஜெட் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் திமுக அரசு என்னென்ன அறிவிப்புகளை வெளியிட போகிறது என்ற எதிர்பார்ப்பும் மக்களிடையே நிலவி வருகிறது.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் முடிந்து புதிய அரசு மீண்டும் பொறுப்பேற்ற பின்னர் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். சட்டமன்றக் கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது தொடர்பாக சட்டமன்ற அலுவல் ஆய்வுக் குழு, சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெறும். அதில் எத்தனை நாட்கள் சட்டப்பேரவையை நடத்துவது என்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.

அனேகமாக 4 நாட்கள், அதாவது பிப்ரவரி 20ம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் பிப்ரவரி 20ம் தேதி 2026-27ம் ஆண்டுக்கான முன்பண மானியக் கோரிக்கையும், 2025-26ம் ஆண்டுக்கான கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகளும் சட்டமன்றத்தில் வாசித்து நிறைவேற்றப்படும் என்று சபாநாயகர் அப்பாவு ஏற்கனவே அறிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில் இந்த சட்டப்பேரவையின் கடைசி கூட்டத் தொடர் என்பதால் எதிர்க்கட்சியான அதிமுக பல்வேறு பிரச்னைகளை எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்க்கட்சிகள் எழுப்பும் பிரச்னைகளுக்கு விரிவாக விளக்கம் ஆளுங்கட்சியான திமுக தரப்பில் கொடுக்கவும் தயாராக உள்ளனர். இதனால், இந்த கடைசி சட்டப்பேரவை கூட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

* தமிழக சட்டப்பேரவை நாளை (செவ்வாய்கிழமை) காலை 9.30 மணிக்கு கூடுகிறது.

* 2026-27ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார்.

* இதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது.

* இந்த சட்டப்பேரவையின் கடைசி கூட்ட தொடர் இதுவாகும். இதனால், இடைக்கால பட்ஜெட் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Related Stories: