தாம்பரம்: தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து சென்னை கடற்கரைக்கும், மறுமார்க்கமாக செங்கல்பட்டு வரையிலும் தினமும் இயக்கப்படும் ஏராளமான மின்சார ரயில்கள் மூலம் லட்சக்கணக்கான பொதுமக்கள் சென்று வருகின்றனர். அதேபோல சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கும், தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கும் தினமும் ஏராளமான எக்ஸ்பிரஸ் ரயில்களில் லட்சக்கணக்கான பொதுமக்கள் தாம்பரம் வழியாகவும், தாம்பரத்தில் இருந்தும் வந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில் தற்போது எழும்பூர் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்ற வருவதால் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பொதுமக்கள் அனைவரும் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து தான் செல்லும் நிலை இருப்பதாக கூறப்படுகிறது. இவ்வாறு செல்லவிருக்கும் பொது மக்களின் நலன் கருதி தாம்பரம் ரயில் நிலையத்தில் ஏசி வசதியுடன் கூடிய காத்திருப்பு அறை அமைக்க திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்றது.
ஏசி வசதியுடன் கூடிய காத்திருப்பு அறை தாம்பரம் ரயில் நிலையத்தில் முதல்முறையாக அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. ரயில் நிலைய மேற்பார்வையாளர் முகமது அப்துல் ரஹ்மான் மற்றும் தாம்பரம் ரயில் நிலைய அதிகாரிகள் இணைந்து புதிய காத்திருப்பு அறையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர். பயணிகள் மற்றும் சுற்றுலா பயணிகளின் வசதி, பாதுகாப்பு மற்றும் சௌகரியத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த அறை தாம்பரம் ரயில் நிலையத்தின் மேற்கு பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த அறையில் சிறப்பு வசதியாக ஆடம்பர சோபா அமர்வு வசதி, தனித்தனி ஆண், பெண் கழிப்பறைகள், தாய்மார் பாலூட்டும் அறை, இலவச வை-பை வசதி, பல்நோக்கு சிற்றுண்டி கடை, மொபைல் சார்ஜிங் பாயிண்ட்கள், இலவச லக்கேஜ் வைக்கும் ரேக்குகள், பாதுகாப்பிற்காக கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஏசி காத்திருப்பு அறை 24 மணி நேரமும் செயல்படும்.
இதற்கு கட்டணமாக ஒரு மணி நேரத்திற்கு ரூபாய் 35 இரவும் கூடுதல் நேரம் காத்திருக்கும் பயனியருக்கு ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 35 ரூபாய் என வசூலிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இதற்கான கட்டணத்தை பணம் மற்றும் டிஜிட்டல் கட்டண முறைகள் இரண்டும் ஏற்கப்படுகின்றன. இந்த வசதிகளை கோயம்புத்தூர் நிறுவனமான சன் மோட்டார் பார்ட்ஸ் என்று நிறுவனம் 5 ஆண்டு கால உரிமம் பெற்று செய்துள்ளது. இந்த புதிய முயற்சி தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான சேவையை மேலும் மேம்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
